ஞாயிறு, 14 ஜூன், 2020

OBC மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி உயர்நீதிமன்றத்தில் அதிமுக மனு தாக்கல்!

Image

மருத்துவ முதுகலை படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, 50 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த உத்தரவிடக் கோரி, அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில், மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அதிமுக விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் என்ற அடிப்படையில், சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தாக்கல் செய்துள்ள மனுவில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு தொடர்பாக, மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தை, மத்திய அரசே மீறி வருவதாகவும், ஒபிசிக்கு இட ஒதுக்கீடு வழங்காதது, இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரானது, எனவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஒபிசி வகுப்பை சேர்ந்த தகுதியான மாணவர்களின் வாய்ப்பு பறிபோவதற்கு, மத்திய அரசே காரணமாக இருக்க கூடாது என்பதால், தமிழகத்தில் மருத்துவ மற்றும் பல்மருத்துவ மேற்படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 சதவீத இடங்களை, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்ய, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும், என மனுவில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே, இது தொடர்பாக திமுக, திராவிடர் கழகம், மதிமுக, பாமக கட்சிகள் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், தற்போது அதிமுகவும் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த வழக்குகள் அனைத்தும், விரைவில் விசாரணைக்கு வர உள்ளன.


Related Posts: