கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தமிழக வேளாண்துறை அமைச்சர் ஆர்.தொரைக்கானு, சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 72 வயதான அமைச்சர், கடந்த சனிக்கிழமை இரவு 11.15 மணிக்கு மரணம் அடைந்தார் என மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 13-ம் தேதி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகச் சேலம் நோக்கிப் புறப்பட்டவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கிறது. இதனை அடுத்து முதற்கட்ட சிகிச்சைக்காக உடனடியாக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பிறகு மேல் சிகிச்சைக்காகச் சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அமைச்சருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு, தோற்று இருப்பது உறுதி செய்தபிறகு அவருக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. நுரையீரலில் 50 சதவிகிதம் தோற்று ஏற்பட்டிருக்கிறது என்று சி.டி.ஸ்கேனில் பதிவாகிய நிலையில், திடீரென மூச்சுத்திணறல் அதிகரித்ததால் செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால், உடல் ஆரோக்கியத்தில் தொடர்ந்து எந்தவித முன்னேற்றமும் இன்றி, சிகிச்சைப் பலனின்றியும் கடந்த சனிக்கிழமை இரவு 11.15 மணிக்கு உயிரிழந்தார். தற்போது சென்னையில் அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் வைக்கப்பட்டிருக்கிறது. முதலமைச்சர் மற்றும் பிற அமைச்சர்களின் அஞ்சலியைத் தொடர்ந்து துரைக்கண்ணுவின் சொந்த ஊரான பாபநாசத்துக்கு அவருடைய உடல் எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படவிருக்கிறது.
“தமிழக அரசின் மாண்புமிகு வேளாண் அமைச்சர் திரு.ஆர்.துரைக்கண்ணு மறைவு குறித்து மிகவும் வருந்துகிறேன். அவர் வேளாண் அமைச்சகத்தை முழு அர்ப்பணிப்புடன் கையாண்டார் மற்றும் அவருக்கான வலுவான அடையாளத்தையும் பதித்தார். அவருடைய அகால மறைவு தமிழக மக்களுக்குக் குறிப்பாக அதிமுக கட்சிக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு”என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தன் இரங்கலைப் பதிவு செய்திருக்கிறார்.
மேலும், பல அமைச்சர்களும் சமுக வலைத்தளங்களில் தங்களின் இறங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.