மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள வன்னியர்களுக்கு அதிமுக அரசு அளித்த 10.5 சதவீதம் இடஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனசென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை அடுத்து, எந்த கருத்தும் தெரிவிக்காமல் அதிமுகவும் பாஜகவும் மௌனம் காத்து வருகின்றன. இந்த விவகாரத்தில் வன்னியர்கள் ஆதரவுத் தளத்தைக் கொண்ட பாமக, ஆளும் திமுகவை உச்ச நீதிமன்றத்தை நாடுமாறு வலியுறுத்திய நிலையில், முக்கிய எதிர்க்கட்சியான அதிமுகவும், பாஜகவும் இந்த விவகாரத்தில் மவுனம் காக்கின்றன.
சமீபத்தில், முல்லைப் பெரியாறு மற்றும் இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்து சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமி வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டார். ஆனால், இந்த விவகாரத்தில் அமைதியாக உள்ளார். வன்னியர் இடஒதுக்கீடு விவகாரம் ஒரு சிக்கலான விவகாரம் அது அதிமுக ஆட்சியில் இருந்தபோது கொந்தளிப்பை ஏற்படுத்தியது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதில் அடுத்த கட்ட நிகழ்வுகளை நாம் காத்திருந்து பார்க்க வேண்டும், ஆனால் அதிமுக ஒரு முக்கிய அரசியல் கட்சியாக இருப்பதால் இந்த விவகாரம் குறித்து விரைவில் கருத்து தெரிவிக்கும் என்றும் கூறுகின்றனர்.
அம்பாசங்கர் மற்றும் சட்டநாதன் கமிஷன் அடிப்படையில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு அதிமுக ஆட்சியில் இருந்தபோது நன்கு ஆராயப்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவின் முழு நகலையும் ஆய்வு செய்த பிறகு பதில் அளிப்போம்” என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அரசு உத்தரவின் அடிப்படையிலேயே நடைபெற்று வருகிறது. தற்போது வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டிற்கு எதிராக நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், பிரச்சினை சிக்கலானதாக மாறும் என்று தெரிவித்தன.
வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு ரத்து செயப்பட்டது குறித்து திமுக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும், தேவைப்பட்டால் எதிர்க்கட்சிகள் அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு அளிக்கும் என்றும் அதிமுகவினர் அறிவித்துள்ளனர்.
அமமுக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜி.செந்தமிழன், முறையான சட்டப் பணிகளை மேற்கொள்ளாமல் வன்னியர் இடஒதுக்கீட்டில் எடப்பாடி பழனிசாமி குளறுபடி செய்துள்ளார். அதை நீதிமன்றம் தனது உத்தரவில் அம்பலப்படுத்தியுள்ளது என்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/aiadmk-bjp-silent-over-hc-order-on-10-5-per-cent-vanniyar-reservation-364906/