15 11 2021 காவிரின் குறுக்கே மேகே தாட்டு அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசின் முயற்சிக்கு தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசின் காவிரி – வைகை – குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு தடை கோரி கர்நாடகா அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா மாநில அரசுகள் 6 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கர்நாடகா அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகே தாட்டு அணை கட்ட முயற்சிக்கும் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால், கர்நாடகா முதல்வர் பொம்மை காவிரியில் மேகே தாட்டு அணையைக் கட்டுவதில் கர்நாடகா அரசு உறுதியாக இருப்பதாகக் கூறினார்.
காவிரியின் குறுக்கே மேகே தாட்டு அணை கட்டப்பட்டால், தமிழ்கத்திற்கு வரும் நீர் பாதிக்கப்படும் என்று தமிழக அரசு, மேகே தாட்டு அணையைக் கட்டக் கூடாது என்று உறுதியாக எதிர்த்து வருகிறது. இதனால், கர்நாடகா அரசு கோபத்தில் இருந்து வருகிறது.
இந்த நிலையில்தான், தமிழ்நாடு அரசின் காவிரி – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு தடை விதிக்க கோரி கர்நாடகா மாநில அரசு ஜூலை மாதம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை இன்று (நவம்பர் 15) மீண்டும் விசாரித்த உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய 3 மாநில அரசுகளும் 6 வாரங்களுகுள் பதிலளிக்க வேண்டும் என்று திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
காவிரி – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு தடை விதிக்க கோரி கர்நாடக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் “காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட தண்ணீரின் அளவை விட கூடுதலாக எடுத்துக் கொள்ள உரிமை கிடையாது. இதனால் காவிரி – வைகை – குண்டாறு திட்டத்தை நிறைவேற்ற அனுமதி வழங்கக்கூடாது. அதுமட்டுமில்லாமல் காவிரியின் குறுக்கே எந்த நீர் திட்டங்களையும் தமிழக அரசு செயல்படுத்தக் கூடாது.
நதிநீர் பங்கீடு செய்யப்பட்ட 483 டிஎம்சி க்கு மேல், இரு மாநிலங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள நீர் கர்நாடக மாநிலத்திற்கு உரிமை என்பது தீர்ப்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கர்நாடகாவின் நீரை மடைமாற்றி சேகரிக்கும் வகையில் அமைய உள்ள காவிரி – வைகை – குண்டாறு திட்டத்தை நிறைவேற்றத் தடை விதிக்க வேண்டும்” என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடந்து வந்த நிலையில், இன்று இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கர்நாடகா அளித்துள்ள மனு தொடர்பாக 6 வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/karnataka-govt-petition-to-stay-cauvery-vaigai-gundaru-merge-plan-supreme-court-notice-to-tamil-nadu-369767/