செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

அரசுக் கலைக் கல்லூரியில் மாணவர்களிடையே பயங்கர மோதல்! August 01, 2017


அரசுக் கலைக் கல்லூரியில் மாணவர்களிடையே பயங்கர மோதல்!


கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவர்களிடையே ஏற்பட்ட கடுமையான மோதலால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இதையடுத்து, நிலைமையை கட்டுப்படுத்த கல்லூரி வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

கோவை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து வரும் மாணவர்கள் கல்லூரிக்கு வெளியே உள்ள அரசு விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இரண்டாமாண்டு மாணவர் லோகேஷ் கல்லூரி விடுதியில் தங்கி பயின்று வருகிறார்.

இவர் நேற்று சட்டைக்கு பட்டன் போடாமல் கல்லூரிக்கு வந்ததாகவும், அதனை மூன்றாமாண்டு மாணவரான மஞ்சுநாதன் தட்டிக் கேட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த மூன்றாமாண்டு மாணவர்கள், லோகேஷ் மற்றும் அவரது நண்பர்களை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் இரண்டாமாண்டு மாணவர்களான ஹரிஹரன், ரஞ்சித் மற்றும் மூன்றாமாண்டு மாணவரான தினேஷ் ஆகியோர் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 4 பேரை சஸ்பெண்ட் செய்துள்ள கல்லூரி நிர்வாகம், வரும் வெள்ளிக்கிழமை வரை கல்லூரிக்கு விடுமுறை அறிவித்துள்ளது. இதனிடையே, காயமடைந்த மாணவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோவை அரசு கலைக் கல்லூரியில் முன்னெச்சரிக்கையாக போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.