இந்தியாவில் நடக்கும் தொலைபேசி உரையாடல்கள் உள்ளிட்ட அனைத்து தொலைத்தொடர்பு வசதிகளையும் கண்காணிக்க மத்திய அரசு தொழில்நுட்பம் ஒன்றைத் தயாரித்துள்ளது. இந்தத் தொழில்நுட்பத்தின் கீழ் பொதுமக்களின் தொலைபேசி உரையாடல்கள், வாட்ஸ் அப் உரையாடல்கள் போன்ற அனைத்தையும் கண்காணிக்க முடியும்.
இதற்காக நாடு முழுவதும் 20 இடங்களில் மத்திய கண்காணிப்பு மையங்கள் செயல்படத்துவங்கிவிட்டன. கூடுதலாக ஒரு கண்காணிப்பு மையமும், இந்த மையத்துக்கான பேரழிவு மீட்புக்குழு ஆகியவை இந்த ஆண்டு இறுதிக்குள் செயலுக்கு வர இருக்கின்றன.
இந்தத் தகவல்களை தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக பேசிய அவர், “ இந்தியாவில் உள்ள அனைவரது வாட்ஸ் அப் உரையாடல்களையும் இந்த தொழில்நுட்பத்தால் கண்காணிக்க முடியாது. இந்த தொழில்நுட்பம் மூலம் சட்டப்படி உரையாடல்கள் கண்காணிக்கப்படும். இந்தியத்தகவல் தொடர்புச்சட்டப்படி தொலைத்தொடர்புகள் கண்காணிக்கப்படும். சட்டத்துக்கு புறம்பாக உரையாடல்களை கண்காணிப்பது தண்டனைகுரிய குற்றமாகும்” என்று தெரிவித்துள்ளார்.