புதன், 7 பிப்ரவரி, 2018

ஆதார் விவரங்கள் பற்றி உச்சநீதிமன்றம் கேள்வி February 6, 2018

Image

தனியார் நிறுவனங்களிடம் கொடுக்கப்படும் ஆதார் விவரங்கள் வெளியானால், அந்த நிறுவனங்கள் மீது தலையிட்டு நடவடிக்கை எடுக்க முடியுமா? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஆதார் அட்டையை கட்டாயமாக்கக் கூடாது என கோரி தனித்தனியாக 21 வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரிக்க தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது. அதன்படி இந்த அமர்வில் ஆதார் தொடர்பான மனுக்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் இன்றைய விசாரணையின் போது, ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ஆதார் தொடர்பான விவரங்கள் அரசு துறைகளில் இருந்து வெளியானால் அரசு நடவடிக்கை எடுக்க முடியும் என தெரிவித்தார். 
ஆனால், ஆதார் விவரத்தை தனியார் நிறுவனங்களிடம் ஆதாரமாக கொடுப்பதை, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் இணைய பக்கத்திலிருந்து  பதிவிறக்கம் செய்ய முடியும் என்றும், இவற்றை முறைகேடாக பயன்படுத்த வாய்ப்புள்ளதாகவும் வாதிட்டார். 

அப்போது, தனியார் நிறுவனங்களிடம் ஆதாரமாக கொடுக்கப்படும் ஆதார் விவரங்கள் வெளியானால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது தலையிட்டு நடவடிக்கை எடுக்க முடியுமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஆதாரை கொண்டு வந்த மத்திய அரசு உரிய வழிமுறைகளை ஆராய்ந்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்க சட்டம் கொண்டு வருமா? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து மனுதாரர்கள் தரப்பு வாதத்தை தொடர வழக்கை நாளைய தினத்துக்கு ஒத்திவைத்தனர். 

Related Posts: