புதன், 7 பிப்ரவரி, 2018

நிலத்தை ஆக்கிரமித்து கோயில் கட்டிய வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து February 6, 2018

Image

தூணிலும், துரும்பிலும் இருக்கும் கடவுள், ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் தனக்கு இடம் வேண்டும் என கேட்பதில்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை தலைமை செயலகம் மற்றும் ரிசர்வ் வங்கிக்கு எதிரே  பொதுப்பணித் துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோட்டை பாளையத்தம்மன் கோவிலை காலி செய்து, இடத்தை ஒப்படைக்க மாவட்ட வருவாய் அலுவலரும், புரசைவாக்கம் வட்டாச்சியரும் நோட்டீஸ் அனுப்பினர். 

இதை எதிர்த்து, கோவில் பூசாரி குருசாமி என்கிற அப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 500 பக்தர்கள் சேர்ந்து கட்டிய அந்த கோவிலை, 50 ஆண்டுகளாக பராமரித்து வருவதால், கோவிலை அகற்றும் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். 

இந்த வழக்கு நீதிபதி எம்.வேணுகோபால், நீதிபதி எஸ். வைத்தியநாதன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு நிலத்தை ஆக்கிரமித்து கோவில் கட்டப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகத்திற்கு தெரிவித்த பிறகே காலி செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதை ஏற்று கொண்ட நீதிபதிகள், புராணங்களில் சொல்லப்பட்ட பிரகலாதன் கதையில் கடவுள் தூணிலும் இருப்பார். துரும்பிலும் இருப்பார் என கூறப்படுவதை சுட்டிக்காட்டினர்.

ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் தனக்கு இடம் வேண்டும் என கடவுள் கேட்பதில்லை என கருத்து தெரிவித்த நீதிபதிகள், தெய்வங்களின் சிலை வைத்து கோவில் எழுப்ப விரும்பினால் அது அங்கீகாரம் பெற்ற நிலமாக இருக்க வேண்டும் என தெரிவித்தனர். அங்கீகரிக்கப்படாத இடத்தில் கட்டியுள்ள கோவிலை இடிக்க வேண்டும்என்றும் சாலையோரம் அமைக்கப்படும் பெரும்பாலான கோவில்கள் அரசு நிலத்தை ஆக்கிரமித்து சுயநலத்திற்காகவே அமைக்கப்படுவதாகவும் தெரிவித்த நீதிபதிகள், பூசாரி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Posts: