பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு வெளியானது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 1 சதவீதம் குறைந்துள்ளது.
பிளஸ் 2 தேர்வுகள் கடந்த மார்ச் 1–ந் தேதி தொடங்கி ஏப்ரல் 6–ந் தேதி வரை நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 66,934 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்து, மதிப்பெண்கள் சரி பார்க்கப்பட்ட பின், தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
இதையொட்டி, சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகிதம் பற்றி விவரங்களை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், 91.1% மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்திருப்பதாகத் தெரிவித்தார்.
வழக்கம் போல், மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றதாகவும் செங்கோட்டையன் தெரிவித்தார். மேலும், தோல்வி அடையும் மாணவர்களுக்கு ஜூன் 25-ந் தேதி மறு தேர்வு நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
தேர்வு முடிவுகளால் மனச்சோர்வடையும் மாணவர்களுக்காக ரேங்க் முறை ரத்து செய்யப்பட்டதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டு வருவதாகவும், அங்கு மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். மேலும், CBSE-ஐ விட சிறப்பானதாக தமிழக அரசின் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் :
91.1 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி
மாணவிகள் 94.1%, மாணவர்கள் 87.7% தேர்ச்சி
வழக்கம் போல் மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகம்
கடந்த ஆண்டை விட 1% தேர்ச்சி விகிதம் குறைவு