இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வில் வழக்கம்போல் மாணவர்களை விட, மாணவியரே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
தேர்ச்சி விகிதம் 91.1 சதவீதம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 8 லட்சத்து 60,434 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில், 4 லட்சத்து 179 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 60,255 பேர் மாணவிகள். இவர்களில் 87.7 சதவீதம் மாணவர்களும், 94.1 சதவீதம் மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 91.1 சதவீதம் ஆகும்.
மதிப்பெண்களை குவித்த மாணவ - மாணவியர்
பிளஸ் 2 பொதுத்தேர்வில், 1180 மதிப்பெண்களுக்கு மேல் 231 மாணவ, மாணவிகள் பெற்றுள்ளனர். 1151 முதல் 1180 மதிப்பெண்கள் வரை 4,847 மாணவ, மாணவிகளும், 1126 முதல் 1150 மதிப்பெண்கள் வரை 8,510 மாணவ, மாணவிகளும் பெற்றுள்ளனர்.
1101 முதல் 1125 மதிப்பெண்கள் வரை 11,739 பேரும், 1001 முதல் 1100 மதிப்பெண்கள் வரை 71,368 மாணவ, மாணவிகளும் பெற்றுள்ளனர். இதே போல், 1001 முதல் 1100 மதிப்பெண்கள் வரை 71,368 பேரும், 901 முதல் 1000 மதிப்பெண்கள் வரை 1 லட்சத்து 7.266 பேரும், 801 முதல் 900 மதிப்பெண்கள் வரை 1 லட்சத்து 43,110 பேரும், 701 முதல் 800 மதிப்பெண்கள் வரை 1 லட்சத்து 65,425 பேரும், 700 மதிப்பெண்களுக்கு கீழ் 3 லட்சத்து 47,938 மாணவ, மாணவிகளும் பெற்றுள்ளனர்.
தமிழில் 96.85 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி
இந்த ஆண்டு தமிழில் 96.85 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆங்கிலத்தில் 96.97 சதவீதம் பேரும், இயற்பியலில் 96.44 சதவீதம் பேரும், வேதியியலில் 95.02 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். உயிரியல் பாடத்தில் 96.34 சதவீதம் பேரும், தாவரவியல் பாடத்தில் 96.96 சதவீதம் மாணவ, மாணவிகளும் தேர்வாகியுள்ளனர். விலங்கியலில் 91.99 சதவீதம் பேரும், கணிதத்தில் 96.19 சதவீதம் பேரும், கணினி அறிவியலில் 96.14 சதவீதம் பேரும், வணிகவியலில் 90.31 சதவீதம் பேரும், பொருளாதாரத்தில் 90.94 சதவீதம் பேரும், வணிகக் கணிதத்தில் 95.99 சதவீதம் மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் முதலிடம்
பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் 97.05 சதவீத மாணவ, மாணவிகளின் தேர்ச்சியுடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. 96.35 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சியுடன் ஈரோடு மாவட்டம் 2-ம் இடம் பிடித்துள்ளது. 96.18 சதவீதத்துடன் திருப்பூர் 3-வது இடத்திலும், 95.88 சதவீதத்துடன் ராமநாதபுரம் மாவட்டம் 4-வது இடத்தையும், 95.72 சதவீதத்துடன் நாமக்கல் 5-வது இடத்தையும், 95.6 சதவீதத்துடன் சிவகங்கை மாவட்டம் 6-வது இடத்தையும் பிடித்துள்ளன.
கடலூர் மாவட்டம் கடைசியிடம்
தேர்ச்சி விகிதத்தில், 83.35 சதவீதம் பெற்ற விழுப்புரம், மாவட்ட அளவில் கடைசி இடத்தைப் பெற்றுள்ளது. 85.38 சதவீதம் மாணவ மாணவிகளின் தேர்ச்சி விகிதத்துடன் அரியலூர் பின் தங்கிய மாவட்டங்களின் பட்டியலில் 2-வது இடத்தை பெற்றுள்ளது. 85.49 சதவீதம் பெற்ற திருவாரூர், 85.97 சதவீதம் பெற்ற நாகப்பட்டினம், 86.69 சதவீதம் பெற்ற கடலூர் ஆகியவை தேர்ச்சி விகிதத்தில் பின் தங்கிய மாவட்டங்களின் பட்டியலில் உள்ளன.
அமைச்சர் அறிவுரை
பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் மனம் வருந்த வேண்டாம் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவுரை வழங்கியுள்ளார். மேலும் அவர்களுக்கு ஜூன் 25-ந் தேதி மறுதேர்வு நடத்தப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.