செவ்வாய், 1 மே, 2018

மஹாராஷ்ட்ரா மற்றும் குஜராத் உருவான நாள் இன்று! May 1, 2018

Image
1956ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட மாநில மறுசீரமைப்பு சட்டத்தினால், மொழிவாரியான மக்களின் போராட்டம் நிறைவிற்கு வந்தது. 

கன்னடம் பேசும் மக்களுக்கு மைசூர் மாநிலம் (பின்னர் கர்நாடகா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது), தெலுங்கு பேசும் மக்களுக்கு அந்திரா, மலையாளம் பேசும் மக்களுக்கு கேரளா மற்றும் தமிழ் பேசும் மக்களுக்கு தமிழ் நாடு என்று ஒதுக்கப்பட்டது. இதனால், அந்தந்த மாநிலத்தை சேர்ந்த மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர்.

ஆனால், குஜராத்தி மற்றும் மராத்தி பேசும் மக்களை மட்டும் ஒரே மாநிலமாக பம்பாய் ஒதுக்கப்பட்டதால், இரு தரப்பினரும் கடும் ஏமாற்றம் அடைந்தனர். அதனால், பல வகையில் தங்களது போராட்டத்தை தொடங்கினர்.


தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், சில வாரங்களில் குஜராத்தி மற்றும் மராத்தி பேசுபவர்களுக்கு இரண்டு தனித்தனி மாநிலங்கள் ஒதுக்கப்படவேண்டும் என்று மிக தீவிரமாக போராட துவங்கினர்.

1956ம் ஆண்டு ஆகஸ்ட் 8 அன்று குஜராத்தி மாணவர்கள் சிலர், அஹமதாபாத்தில் இருந்த அப்போதைய காங்கிரஸ் தலைவர் மொராஜி தேசாய் வீட்டிற்கு நடை பயணமாக சென்றனர். ஆனால், மொராஜி தேசாய் அவர்களை புறக்கணித்தது மட்டுமல்லாமல், போலீசாரிடம் அவர்களை தாக்குமாறு கட்டளையிட்டார். மாணவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்த ஆரம்பித்த்னர். இதனால், போராட்டத்தில் ஈடுபட்ட 5 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. குஜராத்தி பேசும் மக்கள், பம்பாயை தலைநகராக கொண்ட ‘மஹாகுஜராத் அந்தோலன்’ என்ற தனி மாநிலம் வேண்டும் என்று போராட்டம் நடத்த தொடங்கினர். அதே சமயம், மராத்தி பேசும் மக்கள், பம்பாயை தலைநகராக கொண்ட ‘சம்யுக்த மஹாராஷ்ட்ரா அந்தோலன்’ என்ற தனி மாநிலம் வேண்டும் என்று போராட்டம் நடத்த தொடங்கினர்.

பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவண்ணம் இருந்தனர். மிக வலுவாக நடைபெற்ற போராட்டத்தில், 5 ஆண்டுகளில் 100 போராட்டக்காரர்கள் போலீசாரால் கொல்லப்பட்டனர். இருந்தும் மக்கள் போராட்டம் தொடர்ந்துகொண்டே போனது.

முடிவில், 1960ம் ஆண்டு மே 1 அன்று நேரு ஆட்சியில், பம்பாயை இரண்டாக பிரித்தனர். மராத்தி பேசும் மக்களுக்கு மகாராஷ்ட்ரா மாநிலமாகவும், குஜராத்தி பேசும் மக்களுக்கு குஜராத் மாநிலமாகவும் பிர்க்கப்பட்டது. ஆனால், இருதரப்பினரும், பம்பாயை தலைநகராக கேட்டிருந்ததால் குழப்பமடைந்த அரசு, பம்பாயில் மராத்தி பேசும் மக்கள் அதிகமாக இருப்பதால், அதனை மஹாராஷ்ட்ராவின் தலைநகராக அறிவித்தது. இதனால், மராத்தி பேசும் மக்கள் அந்த நாளை சிறப்பாக கொண்டாடினர்.

குஜராத் என்ற தனி மாநிலம் கிடைத்ததால், குஜராத்தி பேசும் மக்களும் வெகு சிறப்பாக கொண்டாடினர். தற்போதைய பிரதமர் நரேந்திர மோடியும், தனது 10ம் வயதில் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு, பின்னர் தனி மாநிலம் கிடைத்தவுடன் இனிப்புகளை வழங்கி கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.