பாகிஸ்தானின் தேசிய விலங்கை இதுவரை இல்லாத அளவுக்கு தொகை செலுத்தி அந்நாட்டின் பலிஸ்தான் பகுதியில் அமெரிக்கர் ஒருவர் வேட்டையாடியுள்ளார்.
பாகிஸ்தானின் தேசிய விலங்கானது மார்க்கோர் காட்டு ஆடு. இது ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், காஷ்மீர் (இமயமலை பகுதி), தஜிகிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான் போன்ற பனிமலைப் பிரதேசங்களில் பரவலாக காணப்படுகின்றன. பன்னாட்டு உயிரின பாகுதுகாப்பு சங்கம் இதனை மிகவும் அரிய விலங்கினங்களில் பட்டியலில் வைத்துள்ளது. நீளமான முடி மற்றும் சுருள் சுருளான இந்த கொம்புகள் இதனை தனித்தன்மையுடன் காட்டுவதாக உள்ளன.
அரிய விலங்கினமான இந்த மார்கோர் காட்டு ஆட்டை வேட்டையாடுவது பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் போட்டித் தொடர்களுக்காக வேட்டையாடுதல் அந்நாட்டால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாதுகாப்பு திட்டத்தின் ஒரு அங்கமாக நடத்தப்பட்ட வேட்டையாடும் போட்டிக்காக இதுவரை இல்லாத அளவாக 1,10,000 அமெரிக்க டாலர்கள் செலுத்தி கில்ஜித் பகுதியில் உள்ள சஸ்சி கிராமத்தில் இந்த ஆட்டினை வேட்டையாடியுள்ளார் Bryan Kinsel Harlan என்ற அமெரிக்கர். இதுவே அதிக தொகை கொடுத்து வேட்டையாடப்பட்ட நிகழ்வாகும்.
அதிக அளவு எடை கொண்ட மார்க்கோர் ஆடுகளை வேட்டையாடும் இந்த போட்டியில் Bryan கலந்துகொண்டு 41 இஞ்ச் அளவுள்ள ஆட்டினை வேட்டையாடியுள்ளார். இது அவருக்கு கோப்பையை வென்று தர உதவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜனவரி 21ல் மற்றொரு அமெரிக்கரான Dianda Christopher Anthony என்பவர் 1,05,000 அமெரிக்க டாலர்களும், John Amistoso என்பவர் 1,00,000 அமெரிக்க டாலர்களும் செலுத்தி இதுபோன்ற ஆடுகளை வேட்டையாடினார்.
2018-19 ஆண்டில் மட்டும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும், உள்ளூர் வேட்டையாளர்களும் இது போன்ற போட்டிகளில் கலந்துகொண்டு சுமார் 50 மார்கோர் ஆடுகளை வேட்டையாடியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த போட்டிகள் மார்கோர் இன ஆடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவியுள்ளதாகவும், இந்த பகுதிக்கு பெருமை தேடித்தந்துள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆடுகளை வேட்டையாடுபவர்கள் அளிக்கும் பணத்தில் 80% உள்ளூர் வாசிகளுக்கும், மிச்சமுள்ள 20% அரசின் கருவூலத்திலும் செலுத்தப்படும் எனவும் அவர்கள் கூறினர். உள்ளூர்வாசிகள் தற்போது இந்த இன ஆடுகளை வேட்டையாடுவதற்கு பதிலாக அதனை காப்பதில் இறங்கியுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
source: ns7tv