உலகில் அதிகரிக்கும் வெப்பநிலையை கட்டுப்படுத்தாவிட்டால் இமயமலையில் உள்ள பனிப்பாறைகளில் மூன்றில் இரண்டு பங்கு உருகிவிடும் என சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தோனேஷியாவில் அடிக்கடி ஏற்படும் சுனாமியும், ஜப்பானில் அவ்வப்போது ஏற்படும் நிலநடுக்கங்களை நாம் வெறும் செய்திகளாக கடந்து போய் விடுகிறோம். ஆனால், அவை எதிர்காலத்தின் விளைவை நமக்கு உணர்த்தும் எச்சரிக்கை மணிகள்.
துருவப்பகுதிகளை தவிர்த்து உலகில் அதிகப்படியான பனிக்கட்டிகள் கிடைப்பது இமயமலை மற்றும் இந்துகுஷ் பகுதிகளில் உள்ள கே2 மற்றும் எவரெஸ்ட் மலை சிகரங்களில் தான். இமயமலை மற்றும் இந்துகுஷ் மலைப்பகுதிகளில் உள்ள பனிமலைகள் தான் உலகின் முக்கியமான 10 நதிகளுக்கு ஆதாரமாக விளங்குகின்றன.
ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், சீனா, இந்தியா, மியான்மர், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 3 ஆயிரத்து 500 கி.மீ பகுதிகளில் பரந்து விரிந்துள்ள இந்த மலைத்தொடர்களின் வாயிலாக, கங்கை, சிந்து, மஞ்சள் நதி, மேகொங் நதி, ஐராவதி போன்ற முக்கிய ஆறுகளும் பாய்ந்தோடி அப்பகுதிகளை வளம்கொழிக்க செய்து வருகின்றன.
இந்நிலையில் ஒருங்கிணைந்த மலை அபிவிருத்திக்கான சர்வதேச மையம் நடத்திய ஆய்வில் அதிர்ச்சக்கரமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் உலகில் வெளியிடப்பட்டு வரும் வெப்பவாயுக்களின் விகிதம் குறைக்கப்படா விட்டால் இமய மலையிலுள்ள பனிப் பாறைகளில் மூன்றில் இரண்டு பங்கு இரண்டாயிரத்து நூறாம் ஆண்டிற்குள் உருகி விடுமென எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
உலக வெப்ப உயர்வை 1.5 டிகிரிக்குள் கட்டுப்படுத்துவது பாரிஸ் உடன்பாட்டின் இலக்கு. எனினும், உலகின் அதிகரித்து வரும் வெப்பநிலையை கட்டுப்படுத்த முயலும் பாரிஸ் உடன்பாடு நிறைவேற்றப்பட்டாலும் கூட கார்பன் டை ஆக்ஸைடு உமிழ்வு உடனடியாக நிறுத்தப்படவில்லை எனில் மூன்றில் ஒருபங்கு பனிப்பாறை உருகிவிடும் எனவும், அவ்வாறு உருகினால், இமயமலை மற்றும் இந்துகுஷ் மலைப்பகுதிகளுக்கு கீழுள்ள நிலப்பகுதிகளில் பேரழிவை உண்டாக்கும் எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
அங்குள்ள பனிமலைகள் தான் 10 நதிகளுக்கு முக்கிய நீராதாரமாக விளங்கி வருவதாகவும், ஆனால் இந்த பனிமலை பிராந்தியம் இன்னும் ஒரு நூற்றாண்டுக்குள் வெறும் பாறைகளை கொண்ட பிராந்தியமாக மாறக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆறுகள் பாதிக்கப்படுவதால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் கடும் பாதிப்புகளை சந்திப்பர் எனவும் கூறப்படுகிறது. புவி வெப்பமயமாதல் மற்றும் மக்கள் தொகை பெருக்கத்தால் அதிகரிக்கும் காற்று மாசு காரணமாகவும் பனி மலைகள் துரிதமாக உருகத்தொடங்கும் எனவும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்துகுஷ், இமயமலை பகுதிகளில் உள்ள பனிமலைகளுக்கு பருவநிலை மாற்றம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள நிலையில், காற்று மாசுவை கட்டுப்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.
source ns7.tv