சனி, 2 பிப்ரவரி, 2019

இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் : விவசாயிகள் அதிருப்தி February 01, 2019

Image

2019-20 ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் விவசாயம் மற்றும் ஓய்வூதியம் குறித்து இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.. 
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கிய நிலையில், இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனை மத்திய பொறுப்பு நிதியமைச்சர் பியூஸ் கோயல் தாக்கல் செய்தார். 
பட்ஜெட்டில் விவசாயத்துறையை பொறுத்த வரை “பிரதமர் கிசான் சம்மான் நிதி யோஜனா” என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம் எனவும், அவர்களுக்கு ஆண்டுதோறும் 6 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்க வழிவகை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கான இந்த திட்டத்திற்காக 75 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, நிதியமைச்சர் பியூஸ் கோயல் கூறியுள்ளார். 
மேலும், தேசிய பேரிடரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அவர்கள் வாங்கிய விவசாய கடனில் 2 சதவீத வட்டி தள்ளுபடி செய்யப்படும் எனவும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில், பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த விவசாயிகள், வேளாண் கடன்களை தள்ளுபடி செய்வது குறித்த எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என அதிருப்தி தெரிவித்துள்ளனர். 
அதேபோல், இடைக்கால நிதிநிலை அறிக்கையானது, பாஜகவின் தேர்தல் அறிக்கை போல் உள்ளதாகவும் விவசாயிகள் விமர்சித்துள்ளனர்.
ஓய்வூதியத்தை பொறுத்த வரை, புதிய பென்ஷன் திட்டத்தின்படி ஊழியர்களுக்கான ஓய்வூதியம் 3,500 ரூபாயில் இருந்து 7,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், ஓய்வூதியத்தில் ஊழியர்களின் பங்களிப்பு 10 சதவீதமாக உள்ள நிலையில், அரசின் பங்களிப்பு 10 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பிரதான் மந்திரி ஷ்ராம் யோகி மாந்தன் என்ற அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டமும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அமைப்பு சாரா துறைகளில் பணிபுரிவோர் தங்களின் ஓய்வுக்கு பிறகு மாதம் 3 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை ஓய்வூதியம் பெற இந்த திட்டம் வழிகை செய்கிறது. இந்த புதிய திட்டத்திற்கு 500  கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள நிதியமைச்சர் பியூஸ் கோயல், இத்திட்டத்தின் மூலம் 10 கோடி பேர் பயன்பெறுவர் என தெரிவித்துள்ளார். 
source ns7.tv