source ns7.tv
மத்திய பட்ஜெட்டால் நடுத்தர மக்களின் கனவு நனவாகும் என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ள நிலையில், நாட்டின் விவசாயிகளை அவமானப்படும் வகையில் பட்ஜெட் அறிவிப்புகள் உள்ளதாக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
நடுத்தர மக்கள், ஏழை விவசாயிகள் என அனைவருக்குமான பட்ஜெட், என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். மத்திய பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இடைக்கால பட்ஜெட் என்றாலும், நாட்டை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்லும் பட்ஜெட் என குறிப்பிட்டுள்ளார். இந்த பட்ஜெட் ஒரு முன்னோட்டம்தான் என்றும், தேர்தலுக்குப் பிறகு வளர்ச்சிக்கான பாதையில் நாடு பீடுநடை போடும் என குறிப்பிட்ட பிதரமர் மோடி, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கான திட்டம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று எனவும் தெரிவித்துள்ளார்.
எத்தனையோ திட்டங்கள் விவசாயிகளுக்காக அறிவிக்கப்பட்டாலும், அதன்மூலம் 2 அல்லது 3 கோடி விவசாயிகள் மட்டுமே பயன்பெற்று வந்ததாக குறிப்பிட்டார். ஆனால், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள திட்டம் மூலம், நாட்டில் உள்ள 12 கோடி விவசாயிகளும் பயன்பெறுவர் என பிரதமர் மோடி தெரிவித்தார். இதனிடையே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, நம் நாட்டின் 15 தொழிலதிபர்களின் மூன்றரை லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ள பாஜக தலைமையிலான மத்திய அரசு, விவசாயிகளுக்கு நாளொன்றுக்கு 17 ரூபாய் மட்டுமே வழங்குவதாக அறிவித்துள்ளது. இது நம் நாட்டின் விவசாயிகளை அவமானப்படுத்தும் செயல் என கடுமையாக விமர்சித்தார்.
வாக்குகளை குறி வைத்தே நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். மத்திய பட்ஜெட் குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களுக்கான பட்ஜெட் இல்லை எனவும், வாக்குகளுக்கான பட்ஜெட் எனவும் குற்றம்சாட்டினார். நிலமற்ற ஏழை விவசாய கூலிகளின் நிலைமை என்ன? அவர்களுக்கான உதவி எங்கே என கேள்வி எழுப்பிய ப.சிதம்பரம், விவசாய கூலிகள் தான் உண்மையான ஏழைகள் எனவும் குறிப்பிட்டார். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையே பாஜக அரசு தாக்கல் செய்த பட்ஜெட் எனவும், எனினும், இது இடைக்கால பட்ஜெட் போல் அல்ல எனவும், தேர்தல் பரப்புரை போல் அமைந்துள்ளதாகவும் விமர்சித்தார்.