திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சுற்றித்திரியும் காட்டுயானை சின்னதம்பியை கும்கி யானைகள் உதவியுடன் பிடித்து மீண்டும் வனப்பகுதிக்குள் விடுமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை தடாகம் பகுதியில் கும்கிக்கள் உதவியுடன் பிடிக்கப்பட்ட சின்னதம்பி காட்டுயானை டாப்சிலிப் அருகே உள்ள வரகலியாரு வனப்பகுதியில் விடப்பட்டது. ஆனால் காட்டுக்குள் இருந்து வெளிவந்த சின்னதம்பி யானை, உணவு தண்ணீர் தேடி அங்கலகுறிச்சி, ஜே.ஜே.நகர், பொங்காலியூர் கிராமங்களில் சுற்றியது. இந்நிலையில் இன்று, மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம் பகுதிக்குள் நுழைந்த அந்த யானை, விளைநிலங்களை சேதப்படுத்துவதாக கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
போக்கு காட்டி வரும் யானையை கும்கிகள் உதவியுடன் பிடித்து, மீண்டும் வனத்திற்குள் விடுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். யானைக்கு ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டுள்ளதால், அவை எங்கு செல்கிறது என்பதை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
source: http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/2/2/2019/people-requested-send-back-chinnathambi-elephant-forest