திங்கள், 4 பிப்ரவரி, 2019

பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்திக் கொள்ள, மத்திய அரசுக்கு எதிராக தர்ணாவா?...! February 04, 2019


Image
பாரதிய ஜனதா கட்சியை ஆட்சி கட்டிலில் இருந்து இறக்க வேண்டும், மோடியை குஜராத்திற்கே மீண்டும் அனுப்ப வேண்டும் என்ற முழக்கங்களோடு, மேற்கு வங்க மாநிலத்தில் எதிர்கட்சிகளின் பிரமாண்ட மாநாட்டை நடத்தியவர் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி.... இந்த மாநாடு நடைபெற்ற சில நாட்களிலேயே, மத்திய அரசு மூலம், மம்தா பானர்ஜிக்கு அழுத்தங்கள் ஏற்படும் என ஊடகங்கள் முன்பே அனுமானித்தன. தற்போது, மேற்குவங்கத்தில் நடக்கும் நிகழ்வுகள், அதை உண்மையாக்கியுள்ளது.  
மேற்கு வங்க மாநிலத்தையே உலுக்கிய, தி ரோஸ் வேலி ஊழல் மற்றும் சாரதா நிதி நிறுவன ஊழல், அம்மாநிலத்தை திக்கு முக்காட செய்தது. இது தொடர்பான, விசாரணைக்காக, கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் ராஜீவ் குமார் வீட்டுக்கு சென்ற சிபிஐ அதிகாரிகளை, அம்மாநில போலீஸார் அதிரடியாக சிறைபிடிக்க, விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.  மேற்கு வங்க மாநிலத்தினுள், அனுமதியின்றி சி.பி.ஐ நுழைய அம்மாநில அரசு ஏற்கனவே சட்டம் கொண்டு வந்து தடை விதித்துள்ளது. அதையும் மீறி மோடியின் அழுத்தத்தாலேயே சிபிஐ அதிகாரிகள் சென்றதாக குற்றம்சாட்டுகிறார் மம்தா. இதற்கு காரணம் இல்லாமலும் இல்லை.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, மேற்கு வங்க மாநிலத்தில் பரப்புரையைத் தொடங்கிய மோடி, மம்தா பானர்ஜிய கடுமையாக விமர்சித்தார். மேற்கு வங்க மாநில மக்கள் மாற்றத்தை விரும்புவதாகவும், அதனைத் தடுக்க மம்தா முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டினார். இதனால், வெகுண்டெழுந்த மம்தா, வாரணாசி தொகுதியில், மோடியால் மீண்டும் வெற்றி பெற முடியுமா என பதிலடி கொடுக்க, அரசியல் களம் சூடுபிடித்தது. 
மம்தாவுக்கு நேரடியாக பதிலளிக்க முடியாமல், சிபிஐ மூலம், மோடி சதுரங்க கட்டைகளை உருட்டிவிடுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்த விவகாரத்தில், மேற்குவங்கத்தில், ஆட்சியைக் கவிழ்க்க, மோடி முயற்சிப்பதாக மம்தா பேனர்ஜி நேரடியாகவே குற்றம்சாட்டியுள்ளார். இதே குற்றச்சாட்டையே ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவும் முன்மொழிந்துள்ளார்.  
பாஜகவுக்கு எதிராக மூன்றாவது அணியை உருவாக்க பாடுபடுபவர்களில், சந்திர பாபு நாயுடுவும் மம்தாவும் முதன்மையானவர்களாக இருப்பதால், அவர்களின் குற்றச்சாட்டை புறக்கணிக்க  முடியவில்லை.  நாடாளுமன்ற தேர்தல் களத்தில், தற்போதைக்கு, பாஜகவுக்கு எதிராக, மம்தா - சந்திரபாபு நாயுடுவின் மூன்றாவது அணியே பிரதான எதிரியாக களத்தில் உள்ளது.   இதனால், அவர்களை மடக்க சிபிஐ மூலம் மோடி அரசு சாட்டையை சுழற்றுவதாக கூறப்படுகிறது. 
நாட்டையே உலுக்கிய தி ரோஸ் வேலி ஊழல் மற்றும் சாரதா நிதி நிறுவன ஊழல் விவகாரத்தில், மம்தாவுக்கு தொடர்பு இருப்பதாக ஏற்கனவே, எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில், அதனையே தற்போது கையில் எடுத்துள்ளது பாஜக. இந்த விவகாரத்தில், சட்டத்தை கையில் வைத்துக்கொண்டு போராடுவது ஒருபுறம் இருந்தாலும், அதனை தள்ளி வைத்துவிட்டு, மக்கள் மன்றத்தில் போராட்டத்தில் இறங்கியுள்ளார் மம்தா. ஒருவகையில், இந்த தர்ணாவை பிரதமர் வேட்பாளராக தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள மம்தா மேற்கொள்ளும் அரசியல் நடவடிக்கையாகவும் கருதலாம்.
நாடாளுமன்றத்திற்கான பரப்புரைகள் இன்னும் தீவிரப்படவில்லை. இருப்பினும், ஆந்திரா - மேற்கு வங்கம் முதலிய மாநிலங்களில் நடக்கும் அரசியல் நிகழ்வுகள், தேர்தலுக்கான கரடு முரடான பாதையை, பாஜக சீரமைக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. 
மேற்கு வங்கத்தில் ஆட்சியைக் கலைக்க பாஜக திட்டமிடுவதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், கூட்டாட்சி தத்துவத்தை காக்க வேண்டும் என வலியுறுத்தி மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி திடீரென தர்ணாவில் ஈடுபட்டது பிரதான பேசுபொருளாக மாறியுள்ளது

source ns7.tv