திங்கள், 4 பிப்ரவரி, 2019

10% இடஒதுக்கீடு பற்றி குறிப்பிட்டு ராகுலுக்கு ராஜினாமா கடிதம் அனுப்பிய குஜராத் பெண் எம்.எல்.ஏ! February 03, 2019


Image
அடுத்த சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், குஜராத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ ஒருவர் ராஜினாமா செய்துள்ளது அரசியல் களத்தை பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.
குஜராத் மாநிலம் மேஹ்சனா மாவட்டம் Unjhaதொகுதியயின் எம்.எல்.ஏவான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆஷா பட்டேல் கட்சியிலிருந்தும், எம்.எல்.ஏ பதவியிலிருந்தும் திடீரென ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளதாகவும், அவரது ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தனது ராஜினாமா குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுலுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “ஒரு பக்கம் பிரதமர் நரேந்திர மோடி பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு கொண்டு வந்துள்ளார், அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி இங்கு சாதிகளுக்கு இடையில் பிரிவினை ஏற்படுத்த முயல்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் பிரிவினைவாதம் மற்றும் பிளவுபடுத்தும் அரசியலில் தான் காங்கிரஸ் கட்சி ஈடுபடுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். 
மேஹ்சனா பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 7 சட்டசபை தொகுதிகளுள் ஒன்று தான் Unjha. இங்குள்ள 7 தொகுதிகளில் 4 பாஜகவிடமும், 3 காங்கிரஸ் வசமும் உள்ளன. பிரதமர் மோடியின் சொந்த ஊரான வத்நகரும் Unjha தொகுதிக்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸில் இருந்து ராஜினாமா செய்ததையடுத்து பாஜகவில் ஆஷா பட்டேல் இணைவாரா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு தனது தொகுதி மக்களிடம் கலந்துரையாடி முடிவை அறிவிப்பதாக கூறினார்.
பட்டேல் சமூகத்திற்கு இடஒதுக்கீடு கோரிய போராட்டம் முடிவடைந்ததையடுத்து 2017 நாராயன் லாலு பட்டேலை வீழ்த்தி எம்.எல்.ஏ வானார் ஆஷா பட்டேல்.
கடந்த ஆண்டு காங்கிரஸின் மூத்த தலைவராக இருந்த பவாலியா காங்கிரஸில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்து ஜஸ்தன் தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் எம்.எல்.ஏ ஆனார். தற்போது அவர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்.
இந்த இரண்டு எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 75ஆக சரிந்துள்ளது. பாஜக 100 எம்.எல்.ஏக்களை கொண்டுள்ளது.

source: ns7.tv