சனி, 11 ஏப்ரல், 2020

இந்தியாவில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறவில்லை: மத்திய சுகாதாரத்துறை

இந்தியாவில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறவில்லை என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.


இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பஞ்சாபில் மே 1ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார். பஞ்சாபில் இதுவரை 104 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 27 பேருக்கு வெளிநாடு சென்று வந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை எனவும், அதனால் பஞ்சாபில் கொரோனா பாதிப்பு சமூக பரவல் நிலைக்கு சென்று விட்டதாகவும் அம்மாநில முதல்வர் கூறியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


இந்நிலையில் பஞ்சாப் முதல்வரின் சமூக பரவல் பற்றிய தகவலுக்கு மத்திய சுகாதாரத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறுகையில், ‘இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு சமூக பரவல் நிலைக்கு செல்லவில்லை. அதனால் மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. கொரோனா தொற்று சமூக பரவல் நிலைக்கு செல்லும் போது மக்களுக்கு அதுகுறித்த தகவல்கள் உடனடியாக தெரிவிக்கப்படும்.

நேற்று 16,002 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், சுமார் 2% பேருக்கு தான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்டுள்ள மாதிரிகளை ஆய்வு செய்ததில், இந்தியாவில் தற்போது வரை கொரோனா பாதிப்பு சமூக பரவல் நிலைக்கு செல்லவில்லை’ என கூறியுள்ளார்.
credit ns7.tv