credit ns7.tv
ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர மக்களுக்கு நகைக்கடன் வழங்க வங்கிகள் மறுப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
அவரது ட்விட்டர் பக்கத்தில், 130 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில், 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு என்பது எளிதான காரியமல்ல என்று கூறியுள்ளார். ஏழைகள் அதிகம் கொண்ட நமது நாட்டில் மக்களை வீட்டிற்குள்ளேயே முடக்க வேண்டுமென்றால், அதிகமான பணம் மக்கள் கைகளுக்கு போய் சேர வேண்டும் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
இதற்கு மத்திய, மாநில அரசுகள் தாரளமாக நிதியளிக்க முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மாநில முதலமைச்சர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனையில், பிரதமர் மோடி நிதி பற்றி எந்தவித உத்தரவாதமும் கொடுக்கவில்லை என்றும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
விரைவு பரிசோதனைக் கருவிகளை கொள்முதல் செய்வதில் தடங்கலும், தாமதமும் ஏற்பட்டுளளதாக விமர்சித்துள்ளார். எல்ஐசி கிளை அலுவலகங்கள் திறக்கப்படாதது ஏன் என்று தெரியவில்லை என்றும், வங்கிகளில் நகைக்கடன்கள் தர மறுக்கப்படுவதாகவும் ப.சிதம்பரம் கூறியுள்ளார். இவ்வாறு இருந்தால் நடுத்தர மக்கள் பணத்திற்கு என்ன செய்வார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.