செவ்வாய், 14 ஏப்ரல், 2020

‘இவர்கள் சொல்வதெல்லாம் பொய் மாமா’ திமுக கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

முன்னாள் அமைச்சரும் திமுக எம்.எல்.ஏ.வுமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அருப்புக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முகக்கவசம் அணியாமல் வந்த இஸ்லாமியர்கள் உளிட்ட திமுக தொண்டர்களை விலகி நிற்குமாறு கூறியதாக சர்ச்சையானது. இதையடுத்து, தான் தவறாக ஏதும் பேசவில்லை என்று சாத்தூர் ராமச்சந்திரன் விளக்கம் அளித்துள்ள வீடியோ இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரலாகி வருகிறது.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை உழவர் சந்தை பகுதியில் திமுக சார்பில் பொதுமக்களுக்கு அரசி மற்றும் முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி கடந்த வாரம் நடைபெற்றது. இதில் திமுக தெற்கு மாவட்டச் செயலாளரும் திமுக ஏம்.எல்.ஏ-வுமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முகக்கவசம் அணியாமல் வந்த இஸ்லாமியர்கள் மற்றும் திமுக தொண்டர்கள் சிலரிடம் ஏன் முகக்கவசம் அணியாமல் வருகிறீர்கள் என்று கேட்ட கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் முகக்கவசம் அணிந்துகொண்டு வாருங்கள் என்று கூறி கடிந்து பேசியுள்ளார்.


இதனைத் தொடர்ந்து, இந்த நிகழ்ச்சியில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசியது குறித்து ஒருவர் விமர்சித்து வாட்ஸப்பில் ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார்.
அந்த வாட்ஸப் ஆடியோவில், “அருப்புக்கோட்டையிலிருந்து பரக்கத் பேசுகிறேன். உழவர் சந்தையில் மாஸ்க் வழங்கும் விழாவில் பங்கேற்ற கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அங்கு சென்ற இஸ்லாமியர்களைப் பார்த்து கொரோனாவே உங்களால்தான் பரவுகிறது. முதலில் வெளியே செல்லுங்கள் எனக் கூறியுள்ளார். இந்த தகவல் அனைத்து ஜமாத், தமுமுக, எஸ்டிபிஐ, தவ்ஹீத் ஜமாத் தலைமையகத்திற்கு கொண்டு செல்லுங்கள்” என்று பேசியது இஸ்லாமிய அமைப்புகள் அரசியல் கட்சிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேசியது குறித்து ஜமாத் நிர்வாகிகள், திமுகவைச் சேர்ந்த இஸ்லாமிய நிர்வாகிகள் என பலர் அவரிடம் பேசியுள்ளனர். அவர்களுக்கு தான் தவறாக ஏதும் பேசவில்லை என கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார். அதோடு, இஸ்லாமியத் தலைவர்கள் பலரை அவரே தொடர்புகொண்டு தான் யாரையும் புண்படுத்தும்படியாக பேசவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் விருதுநகர் மாவட்டச் செயலர் ஜிந்தாஷா கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசிய ஆடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆடியோவில், “வணக்கம் மாமா நான் கே.கே.எஸ்.எஸ்.ஆர். பேசுகிறேன். இப்போது இவர்கள் சொல்வது எல்லாம் பொய் மாமா. நான் திட்டியது வாஸ்தவம். மாஸ்க் போடாமல் வந்ததால் திட்டினேன். உங்கள் தெருவில்தானே பாதிப்பு வந்துள்ளது. நீங்கள் மாஸ்க் போடாமல் வந்துள்ளீர்களே, இப்படி வந்தால் உங்கள் குடும்பம்தானே பாதிக்கும் என சப்தம் போட்டது வாஸ்தவம். நான் இல்லையெனக் கூறவில்லை.
உங்கள் தெருவை பிளாக் செய்ய வேண்டும் என்று கூறினார்கள். விருதுநகரில் பல தெருக்களை கட்டை கட்டி மறித்துவிட்டனர். நம்ம தெருவில்தான் நான் கட்டைபோட்டு கட்டவிடவில்லை. போலீஸாரும், வட்டாட்சியர் அலுவலகத்திலும் இங்கு கட்டை போட்டுகட்ட வேண்டும் என்றார்கள்.
ஒருவர்தான் பாதிக்கப்பட்டுள்ளார். அவரையும் நீங்கள் கண்டறிந்துவிட்டீர்கள். இனிமேல் ஏன் கட்டை கட்டவேண்டும் என்று கூறி நான் நிறுத்திவிட்டேன். எல்லா ஊரிலும் ஜமாத்திற்கு சென்று வேறு ஆட்கள் வந்துள்ளார்களா என சோதனை செய்தார்கள். உங்கள் ஜமாத்துக்கு நாங்கள் ஆளே அனுப்பவில்லை. நம்ம ஊரில் மட்டும்தான் நான் நமது மக்களை எந்தத் தொந்தரவும் இல்லாமல் வைத்துள்ளேன். ஏனெனில் அந்த ஓட்டு முழுவதும் என் ஓட்டு என்று தெரியும்.
பாதிப்பு ஏற்பட்டால் 15 நாள் தனியாக வைத்துவிடுவார்கள். வீட்டு வாசலில்அறிவிப்பு பேப்பர் ஒட்டிவிடுவார்கள். இது அசிங்கமாகஇருக்கும். பக்கத்து வீட்டுக்காரர்கள்கூட உங்களிடம் பேசமாட்டார்கள். நான் பேசியதை வேண்டுமென்றே தவறாகப் பரப்பிவிட்டார்கள். அங்கிருந்த 3 பேரும் எங்களது கட்சிக்காரர்கள். இவர்கள் மூவரும் தான் என்னைப் பார்ப்பார்கள். நான் அந்த மூவரைத்தான் திட்டுவேன்.
அருப்புக்கோட்டையில் போலீஸ் தொந்தரவோ, தாசில்தார் தொந்தரவோ, கலெக்டர் தொந்தரவோ இல்லாமல் நான் தான் பார்த்துக்கொண்டுள்ளேன். இல்லையெனில் உங்களை பாதி கிறுக்காக ஆக்கியிருப்பார்கள்.
கட்டையைக் கட்டவேண்டும் என்று மல்லுக்கட்டியிருப்பார்கள். அதனால் யார் சொன்னாலும் நீங்கள் நம்பவேண்டாம். திட்டியது உண்மை. நீ செயலாளர், நாளைக்கு நீ தேர்தலுக்கு வேண்டுமா வேண்டாமா எனத் திட்டினேன். நீ எச்சரிக்கையாக இருக்க வேண்டாமா என்று தான் திட்டினேன். அதை தவறாக எடுத்துக்கொண்டால் எப்படி?
மாக்ஸ் போடாத எல்லோரையும் தான் திட்டுகிறேன். இந்துவாக இருந்தாலும் திட்டுகிறேன். கிறிஸ்தவராக இருந்தாலும் திட்டுகிறேன்.
யாராக இருந்தாலும் தான் திட்டுகிறேன். உங்களை நான் எப்படி இழப்பேன். புதிய பேருந்து நிலையத்தில் கூட கடைபோடக்கூடாது என்றார்கள்.
கடைபோட நான்தான் அனுமதியளித்தேன். சாமியான பந்தல் போடச் சொன்னதும் நான்தான். நல்லது எதுவும் வெளியில் வருவதில்லை. கெட்டது மட்டும் தானே வருகிறது.” என்று கே.கே.எஸ்.எஸ்.ஆர் பேசுவதாகப் பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வாட்ஸப்பில் ஆடியோ மூலம் விளக்கம் அளித்து வெளியிடுமாறு ஜிந்தாஷா கேட்டுக்கொண்டுள்ளார்.
திமுக எம்.எல்.ஏ கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அரசியலுக்காக கொரோனா பாதிக்கப்பட்டவர் உள்ள பகுதியை சுகாதாரத்துறை ஊழியர்கள் தடுப்புகளை அமைக்க விடாமல் செய்துள்ளார்; ஓட்டுக்காக மக்களின் உயிரைப் பனையம் வைத்துள்ளார் என்றும் கூறி அவருடைய ஆடியோ பேச்சைக் குறிப்பிட்டு மீண்டும் சர்ச்சை எழுந்தது.
இது ஊடகங்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ள, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் “நான் எந்த சமூகத்தையும் குறிப்பிட்டு பேசவில்லை. முகக்கவசம் அணியாதவர்களை மட்டுமே நான் அப்படி கூறினேன். சிலர் சாதாரணமான எனது பேச்சை கட்சி தொண்டர்களிடம் திரித்து பேசி வருகின்றனர். நான் அவர்களிடம் முகக்கவசம் அணியாமல் வெளியே வருவது அவர்களுடைய ஆரோக்கியத்தை மட்டுமல்ல, அவர்களது குடும்பத்தினரையும் பாதிக்க்கும் என்று கூறினேன். நான் எந்தவொரு குறிப்பிட்ட சமூகத்தையும் குறிப்பிட்டு கொண்டிருக்கவில்லை” என்று கூறினார்.

Related Posts: