செவ்வாய், 7 ஏப்ரல், 2020

கைகளை தட்டுவதாலோ விளக்குகளை ஏற்றுவதலோ கொரோனா ஒழியாது - புதுவை முதல்வர்

Puducherry CM Narayanasamy urges PM Modi to release fund for states : இந்தியாவில் கொரோனா நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,500 முறை தாண்டியுள்ளது. இந்நிலையில் இந்நோய்க்கு எதிரான போரில் இந்தியாவின் ஒற்றுமையை உலகறியச் செய்யும் வகையில் நேற்று இரவு ஒன்பது மணிக்கு ஆரம்பித்து ஒன்பது நிமிடங்கள் அகல்விளக்கு, மெழுகுவர்த்தி அல்லது மொபைல் டார்ச் லைட் மூலம் விளக்கேற்றுங்கள் என பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தினார்.
பிரதமரின் வேண்டுகோளை ஏற்று இந்தியாவின் பல்வேறு பகுதியில் உள்ள மக்கள் தங்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தினர். புதுவை முதல்வர் நாராயணசாமியும் 9 நிமிடங்கள் தன்னுடைய வீட்டு பால்கனியில் நின்று மெழுகுவர்த்தி ஏந்தி நின்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விளக்கேற்றுவதாலோ அல்லது கைகளை தட்டுவதாலோ ஒரு நோய்க்கு தீர்வு காண முடியாது.
இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பிரதமர் யோசித்து செயல்பட வேண்டும். கொரோனா நோயை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு மற்றும் கடமை பிரதமர் மோடி மற்றும் அவர் தலைமையில் உருவாகியிருக்கும் மத்திய அரசிற்கு உள்ளது. இந்த விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்ய விரும்பவில்லை. ஆனால் நோய் சிகிச்சைக்கு தேவையான வென்டிலேட்டர் உட்பட எந்த மருத்துவ உபகரண பொருட்களும் நிறைய மாநிலங்களில் கிடைக்கவில்லை.
இதற்கு தான் பிரதமர் மோடி தீர்வு காணவேண்டும். அதேபோன்று மாநில அரசுகளுக்கு தேவையான நிதியை பிரதமர் மோடி வழங்க வேண்டும். பொருளாதார நிபுணர்களை சந்தித்து பொருளாதாரத்தை மேம்படுத்த முயலவேண்டும். நிதி நெருக்கடியால் அனைத்து தரப்பினரும் சிக்கித் தவிக்கின்றனர். இதனால் பொருளாதார நிபுணர்களை சந்தித்து இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க என்ன முயற்சிகள் தேவையோ அதை தான் அவர் செய்ய வேண்டும். மற்ற அறிவிப்புகளால் எந்த பலனும் மக்களுக்கு கிடையாது என்று தன்னுடைய விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.