மொபைல் எண்ணை 11 இலக்கமாக மாற்ற பரிந்துரை செய்யவில்லை என டிராய் விளக்கமளித்துள்ளது.
இந்தியாவில் தகவல் தொடர்பு பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியால் இணையத்தை அதிக அளவிலான மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் 11 இலக்க மொபைல் எண்ணை அனைவருக்கும் வழங்க இந்திய தொலைத்தொடர்பு ஆணைய அமைப்பான டிராய் பரிந்துரை செய்திருந்ததாக பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இதன் மூலம் இன்னும் அதிகமான மக்களுக்கு எண்கள் ஒதுக்க வசதியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் செல்போன் எண்களுக்கு தற்போது புழக்கத்தில் உள்ள 10 இலக்க எண்கள் முறையே தொடரும் என டிராய் விளக்கம் அளித்துள்ளது.
மொபைல் போன்களுக்கு 11 இலக்க முறையை பரிந்துரைக்கவில்லை என்றும், அறிக்கைகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
ஆனால் லேண்ட்லைன் கனெக்ஷனில் இருந்து மொபைல் போன்களை தொடர்பு கொள்ளும் போது 10 இலக்க எண்களுக்கு முன் பூஜ்ஜியத்தை பயன்படுத்தலாம் என பரிந்துரை செய்ததாக குறிப்பிட்டுள்ளது.
இதனை வைத்து 11 இலக்க எண்களாக மாறும் என தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டதாக கூறியுள்ளது. 10 இலக்க எண்களுக்கு முன் பூஜ்ஜியம் போடுவதன் மூலம் இனி வரும் காலங்களில் 5,544 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்க முடியும் என குறிப்பிட்டுள்ளது.