வியாழன், 11 ஜூன், 2020

சென்னையில் கணக்கில் வராத 200-க்கும் மேற்பட்ட கொரோனா மரணம்: விசாரணைக்கு அரசு உத்தரவு

credit 

சென்னையில் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்த 236 பேரின் பெயர்கள் பலியானோர் பட்டியலில் இருந்து விடுபட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதுதொடர்பான உயர்மட்ட விசாரணைக்கு அரசு உத்தரவிடப்பட்டுள்ளதாக, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, சென்னை மாநகராட்சியின் சுகாதார அதிகாரிகளால் பராமரிக்கப்படும் இறப்பு பதிவேட்டில், சுகாதாரத்துறை இயக்குனரகத்தின் பட்டியலை விட 236 மரணங்கள் கூடுதலாக பதிவு செய்யப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மட்டும் வைரஸ் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 460 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் 236 கோவிட்-19 இறப்புகள் மிஸ்ஸிங் – அதிர்ந்த அதிகாரிகள்!

ஜூன் 10ம் தேதி மாலை நிலவரப்படி, தமிழகத்தில் கொரோனா பாதிப்பிற்கு 326 பேர் மரணமடைந்துள்ளதாகவும், இதில் 260 மரறங்கள் சென்னையில் மட்டுமே நிகழ்ந்துள்ளதாக மாநில அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பாதிப்பால் ஏற்படும் மரணங்கள் குறித்து தினந்தோறும் அரசுக்கு சென்னை மாநகராட்சி அறிக்கை அளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ள போதிலும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததால், அந்த நடைமுறை சரிவர கடைப்பிடிக்கவில்லை, இந்தகாரணத்தினாலேயே இந்த வேறுபாடு நிகழ்ந்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்

9 பேர் கொண்ட குழு : தமிழக அரசின் கொரோனா மரண எண்ணிக்கைக்கும், சென்னை மாநகராட்சியின் இறப்பு பதிவேட்டிற்கும் இடையே வேறுபாடு உள்ள நிலையில், இதுகுறித்து ஆராய 9 பேர் கொண்ட நல்லிணக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பால் நிகழும் மரணங்கள் குறித்த எந்த தகவலையும் தமிழக அரசு மறைப்பதில்லை, மறைக்கவும் செய்யாது. இதற்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நிகழும் கொரோனா மரணங்கள் தொடர்பான அறிக்கையை தொடர்ந்து பெற்று வருகிறோம். ஆனால் சில மரணங்கள், அந்த பட்டியலில் இணைக்கப்படாத விபரம் தற்போது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக அமைக்கப்பட்டுள்ள 9 பேர் கொண்ட குழு, சென்னை நகரத்திற்குள் நிகழ்ந்துள்ள கொரோனா மரணங்கள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளதாக பீலா ராஜேஷ் மேலும் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள மருத்துவ கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் என அனைத்திலும் நிகழும் கொரோனா மரணங்கள் தொடர்பான அறிக்கையை தினமும் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம். பலியானோர் பட்டியலில் விடுபட்டுள்ளவர்கள், அவர்கள் தத்தமது வீடுகளிலோ அல்லது தனியார் கிளினிக்களிலோ இறந்திருக்கலாம் என்று கருதப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு பேட்டியளித்த மாநகராட்சி அதிகாரி கூறியதாவது, கொரோனா பாதிப்பு காரணமாகல, மாநகராட்சி அலுவலகங்களில் போதிய ஊழியர் இல்லாததால், பிறப்பு / இறப்பு பதிவுகள் நடவடிக்கைகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பிரிவு பணியாளர்கள், தற்போது கட்டுப்பாட்டு பணிகளில் பணியமர்த்தப்பட்டுள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
கொரோனா தொடங்கியதிலிருந்து, பிறப், இறப்பு பதிவு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாலேயே இந்த குளறுபடி நிகழ்ந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் பி வடிவேலன் கூறியதாவது, சென்னை மாநகராட்சி எல்லைக்குள் நிகழும் கொரோனா மரணங்கள் குறித்த அறிவிப்பை தினமும் வெளியிட தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது அமைக்கப்பட்டுள்ள 9 பேர் கொண்ட குழு, ஒவ்வொரு மரணம் குறித்தும் விசாரணை மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பால் நிகழும் மரணங்கள் குறித்து பல்வேறு அமைப்பினர் குற்றஞ்சாட்டி வரும்நிலையில், அறப்போர் இயக்கமும், அரசு மருத்துவ கல்லூரியில் நிகழ்ந்துள்ள 3 பேரின் மரணங்களை, அரசு கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அறப்போர் இயக்கத்தை சேர்ந்த ஜெயராமன் வெங்கடேசன் கூறியதாவது, அரசு மருத்துவ கல்லூரிகள் நேரடியாக சுகாதாரத்துறையிடம் அறிக்கை அளித்து வருகின்றன. ஆனால், சுகாதாரத்துறையோ, 200 பேர் மரணம் குறித்த பட்டியலை சமர்ப்பிக்கவில்லை என்று மாநகராட்சியை குற்றம் சுமத்துகிறது. மருத்துவக்கல்லூரியில் நிகழ்ந்த மரணத்தை ஏன் அரசு சேர்க்கவில்லை என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பெரம்பூரில் உள்ள தெற்கு ரயில்வே மருத்துவமனையில் 20 பேர் மரணமடைந்துள்ள நிலையில், அதுவும் அரசு எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை. அங்கு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட பிறகு மாநகராட்சியின் இறப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டதாக அவர் கூறினார்.