வெள்ளி, 5 ஜூன், 2020

கோட்டையிலும் புகுந்த கொரோனா: சென்னை தலைமைச் செயலகத்தில் 23 பேர் பாதிப்பு

தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதில் 8 பேர் அதிகாரிகள். எனவே கோட்டைக்குள் ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என தலைமைச் செயலக சங்கம் கோரிக்கை வைத்திருக்கிறது.

தமிழக அரசு நிர்வாகத்தின் தலைமையகம், சென்னை கடற்கரை சாலையில் அமைந்துள்ள தலைமைச் செயலகம். முதல்வர் அலுவலகம், அனைத்து அமைச்சர்கள், துறைச் செயலாளர்கள், சட்டமன்றம் உள்ளிட்டவை இங்கு இருக்கின்றன. ஆயிரக்கணக்கான ஊழியர்கள் உங்கு பணியில் இருக்கிறார்கள்.


பாரம்பரியமான கோட்டையில் தலைமைச் செயலகம் இயங்குவதால், கோட்டை என்றே இன்றும் பேச்சுவழக்கில் அழைக்கப்படுகிறது. சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் தலைமைச் செயலகத்திலும் கொரோனாவின் தாக்கம் தெரியத் தொடங்கியிருக்கிறது.

இதுவரை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகள், ஊழியர்கள் உள்பட மொத்தம் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்திருக்கிறது. இவர்களில் 8 பேர் அதிகாரிகள். இன்னும் சில ஐஏஎஸ் அதிகாரிகளின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியிருக்கிறது.

தலைமைச் செயலகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து தலைமைச் செயலக சங்கத் தலைவர் பீட்டர் அந்தோணிசாமி கூறுகையில், ‘ஜூன் 1-ம் தேதி முதல் 50 சதவிகித பணியாளர்களுடன் தலைமைச் செயலகம் இயங்குகிறது. இதனால் சரியாக சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியவில்லை. எனவே பணியாளர்கள் வருகையை 33 சதவிகிதமாக குறைக்க வேண்டும்.

சென்னையில் கட்டுப்பாடு பகுதியில் இருந்து வருகிறவர்களுக்கு வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், சிறு குழந்தைகளின் தாயார் ஆகியோருக்கு சிறப்பு கேஷுவல் விடுப்பு அனுமதிக்க வேண்டும். தலைமைச் செயலகத்தில் நுழையும் ஒவ்வொருவரையும் தெர்மல் ஸ்கேனர் செய்த பிறகே அனுமதிக்க வேண்டும். பொதுமக்கள் வருகையை இந்த நேரத்தில் கட்டுப்படுத்த வேண்டும்’ என்றார் பீட்டர் அந்தோணி சாமி.

டிஜிபி அலுவலகத்தில் ஏற்கனவே போலீஸ் அதிகாரிகள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து தலைமைச் செயலகத்திலும் பாதிப்பு ஏற்பட்டிருப்பது அரசு ஊழியர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது