இந்தியாவுடனான தென்கிழக்கு ஆசியாவின் கலாச்சாரம், மொழி, மற்றும் மதரீதியான தொடர்புகளுக்கான ஆதாரங்களாக விளங்கும் கட்டுமானங்கள் மற்றும் கோவில்களில் மை சன் (My Son) கோவிலும் ஒன்று.
ஃபர்தர் இந்தியா
தென்கிழக்கு ஆசிய தொல்லியல் துறை ஆராய்ச்சியாளரான, பிரான்ஸ் நாட்டு அறிஞர் ஜார்ஜ் கோய்ட்ஸ் தான் முதன்முதலாக ஃபர்தர் இந்தியா என்ற பதத்தினை உருவாக்கினார். வியட்நாம், கம்போடியா, லாவோஸ், மியான்மர் மற்றும் மலாய் ஆகிய நாடுகளில் இந்திய முறைப்படி நடைபெற்ற ஆட்சிமுறைகளை குறிப்பதற்காக இந்த பதம் உருவாக்கப்பட்டது. இந்த நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவுகள் வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் இருந்தே இருந்தாலும், இந்த பகுதிகளில் இந்திய ராஜ்ஜியங்கள், கிறிஸ்த்து பிறப்பிற்கு பிறகே உருவானது.
கிறித்துவ காலக்கட்டத்தின் போது தென்கிழக்கு ஆசிய பிராந்தியங்கள் தங்கத்தின் நிலம் என்று அறியப்பட்டது. இந்தியாவில் இருந்து பலரும் தங்கத்திற்காக அங்கே சென்றனர் என்று ஜார்ஜ் தன்னுடைய தென்கிழக்கு ஆசியாவில் இந்திய ராஜ்ஜியங்கள் என்று பொருள்படும் ‘The Indianized States of Southeast Asia’ என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் மசாலாப் பொருட்கள், அகில் மற்றும் வாசனை தரும் மரங்கள் ஆகியவற்றிற்காக இரு பிராந்தியங்கள் மத்தியில் வர்த்தக போக்குவரத்து நடைபெற்றது. ஆனால் எப்படி வர்த்தகம் ராஜ்ஜியங்களை உருவாக்கியது என்பதில் தெளிவில்லை என்றும் அறிவிக்கிறார். மேலும் தனி வர்த்தகர்கள் அங்கே சென்று ராஜ்ஜியங்களை உருவாக்கியிருக்கலாம் அல்லது உள்ளூர் தலைவர்கள் இந்து மேட்டுக்குடியினரிடம் ஆலோசனை பெற்று அவர்களின் பழக்கவழக்கங்களை மாற்றியிருக்கலாம் என்று கூறியுள்ளார். கம்போடியா, சம்பா, மலாய் தீபகற்பம், சுமத்ரா, ஜாவா, பாலி, பர்மா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இந்திய ராஜ்ஜியங்கள் இப்படி உருவாகியிருக்க வாய்ப்புகள் உள்ளது என்றும் அவர் மேற்கோள்காட்டியுள்ளார்.
இந்தியாவின் பல்வேறு பழக்கவழக்கங்கள் இந்த நாடுகளில் வாழும் மக்களின் வாழ்வியல் முறைகளில் ஒன்றாக மாறிவிட்டது. இந்த நாடுகளில் பேசப்படும் மொழிகளில் இருக்கும் சமஸ்கிருத வார்த்தைகளின் பயன்பாடு, இந்திய மொழிகளின் எழுத்த முறை, இந்திய சட்டங்கள் மற்றும் நிர்வாகம், இஸ்லாமிய நாடுகளாய் இருப்பினும் இன்றும் நடைமுறையில் இருக்கும் பிராமண பழக்கவங்கள்,இந்த பகுதிகளில் அமைந்திருக்கும் கோவில்கள் மற்றும் கட்டுமானங்களில் காணப்படும் இந்திய கட்டிடக்கலை மற்றும் அந்த கோவில்களில் காணப்படும் சமஸ்கிருத கல்வெட்டுகள் போன்றவை இதற்கு ஆகச்சிறந்த உதாரணம் என்று கோய்ட்ஸ் குறிப்பிடுகிறார்.
மை சன் கோவிலுக்கு உயிர் கொடுத்த சம்பா ராஜ்ஜியம்
புகழ்பெற்ற எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான கீதேஷ் சர்மா தனது ‘வியட்நாமில் இந்திய கலாச்சாரத்தின் தடயங்கள்(Traces of Indian culture in Vietnam) என்ற புத்தகத்தில் ‘வியட்நாமின் 54 இன சிறுபான்மை குழுக்களில் சம்பா அல்லது சாம் இனக்குழு ஒன்று, அவர்களின் முன்னோர்கள் வியட்நாமில் இந்து இராஜ்ஜியத்தை நிறுவினார்கள். மூன்றாம் நூற்றாண்டு துவங்கி இந்த ராஜ்ஜியம் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நீடித்தது என்று எழுதியுள்ளார்.
சம்பா என்ற வார்த்தை சமஸ்கிருதம் மற்றும் பாலி மொழியின் தொடர்பை கொண்டிருப்பதை குறிப்பிடுகின்றனர் வரலாற்றாசிரியர்கள். மேலும் கி.மு. 5ம் நூற்றாண்டில் வாழ்ந்த மகத பேரரசர் பிம்பிசாராவின் தலைநகர் பெயரும் சம்பா என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இருந்து வியட்நாமிற்கு முதலில் குடியேறியவர்கள் சம்பாவில் (பிஹாரின் பாகல்பூர்) இருந்து சென்றவர்களாக இருக்கலாம். எனவே தான் அவர்கள் தங்களை சம்பா இனத்தினர் என்று கூறுவதை விரும்பியுள்ளனர். அவர்கள் மட்டுமில்லாமல், கலிங்கா, அமராவதி, குஜராத் போன்ற பகுதிகளில் இருந்து இடம் பெயர்ந்து சென்ற இந்தியர்களும் தங்களை சாம்ஸ் அல்லது சம்பா இனத்தினர் என்றே அடையாளப்படுத்திக் கொண்டனர்.
தற்போது சாம் கலாச்சாரத்தில் இந்து மற்றும் புத்த நம்பிக்கைகள் வேரூன்றி காணப்படுகிறது. கி.பி. 78ம் ஆண்டில் குஷண வம்சத்தின் பேரரசர் கனிஷ்கா அறிமுகம் செய்த சக சம்வத் என்ற நாட்காட்டியை அவர்கள் இன்றும் கடைபிடிக்கின்றனர். சாம் இனத்தினர் இன்றும் இறந்தவர்களை இந்து முறைப்படை தகனம் செய்து, ஒவ்வொரு ஆண்டும் இறந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்துகின்றனர். இந்த பகுதியில் நெல் விவசாயத்தை சாம் இனத்தினர் 4 அல்லது 5ம் நூற்றாண்டில், அவர்கள் கொண்டுவந்திருந்த நெற்பயிர்களை கொண்டு அறிமுகம் செய்து வைத்தனர் என்றும் ஷர்மா எழுதுகிறார்.
பத்ரவர்மன் 1 அரசனின் ஆட்சி காலமான நான்காம் நூற்றாண்டில் இருந்து மை சன் பகுதியில் மத கட்டிட வேலைகள் ஆரம்பமாகின. பத்ரவர்மன் சிவலிங்கத்துடன் கூடிய பெரிய வழிபாட்டு தலத்தை இங்கே முதலில் நிறுவினார். மை சன் முழுவதும் சிவனுக்காக அர்பணிக்கப்பட்டது. காலங்கள் உருண்டோட இங்கே நிறைய சிவாலயங்கள் உருவானது. அதே நேரத்தில் சாம் ராஜ வம்சத்தில் இறந்தவர்களின் உடல்களும் இங்கே புதைக்கப்பட்டது. தற்போது இங்கே எஞ்சியிருக்கும் கோவில்கள் அனைத்தும் 9 மற்றும் 10-ஆம் நூற்றாண்டாடுகளில் கட்டப்பட்டது.