திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா ஊரடங்கினால் மின் கணக்கீடு எடுக்க முடியவில்லை என்ற காரணத்தால், முந்தைய மாதங்களில் மின் நுகர்வோர் செலுத்திய கட்டணத்தை மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கும் செலுத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்ததை சுட்டிக்காட்டியுள்ளார். அதை நம்பிய பொதுமக்களுக்கு தற்போது மிகப்பெரிய ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் . உத்தரவாதம் தரப்பட்டபடி மின்கட்டணம் வசூல் செய்யாமல் வெவ்வேறான அடிப்படையில் புதிய மின் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இதனால் பல்வேறு தரப்பு மின் நுகர்வோர்களும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். 6 மாதங்களுக்காவது “கொரோனா கால” மின் கட்டண சலுகைகளை வழங்கி மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.