கீழடியில் தென்னை கன்று நடுவதற்க்காக தோண்டப்பட்ட குழியில் மண்டை ஓட்டுடன் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கீழடி, கொந்தகை, அகரம் உள்ளிட்ட இடங்களில் தற்போது ஆறாம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. மதுரை காமராசர் பல்கலைகழக உயிரியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் பிச்சப்பன், தொல்லியல் அலுவலர் பாஸ்கரன், ரமேஷ் உள்ளிட்ட தொல்லியல் துறையினரால் இந்த அகழாய்வு நடத்தப்பட்டு வருகிறது. அகழாய்வு நடத்தப்படும் நிலத்தின் அருகே உள்ள தனது நிலத்தில், கதிரேசன் தென்னை கன்று நடுவதற்காக குழி தோண்டியுள்ளார். அப்போது தாழி ஒன்று இருப்பது தெரியவந்தது.
இது குறித்து தொல்லியல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து நேரில் சென்று தாழியை ஆய்வு செய்தனர். அதில் மண்டை ஓடு, எலும்புகள் இருப்பது அவர்களுக்கு தெரியவந்தது. தற்போது கிடைத்த தாழி, மண்டை ஓடுகளை ஆய்வு மையத்திற்கு அனுப்ப உள்ளதாகவும் அதன் பின்னரே எவ்வளவு பழமையானது என்பது தெரியவரும் என்றும் தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.