ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் மாஸ்க் அணியாத காரணத்திற்காக இளைஞர் ஒருவரின் கழுத்தை போலீஸ் ஒருவர் முட்டியால் அழுத்திய சம்பவம் நடந்துள்ளது. இந்த வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் மின்னபொலிஸ் நகரில் ஜார்ஜ் பிளாயிட் என்ற கருப்பின இளைஞரை போலீஸ் ஒருவர் கழுத்து பகுதியை முட்டியால் அழுத்தியதில் அவர் உயிரிழந்தார். இதையடுத்து அமெரிக்காவில் பெரும் மக்கள் போராட்டம் இன்றைய தினம் வரை நீடித்து வருகிறது. போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்கா திணறி வருகிறது.
Rajasthan’s #GeorgeFloyd moment: Police kneeling neck of a man who thrashed cop, threatened to kill them, in Jodhpur on Thursday evening. #BlackLivesMatter #blacklifematters @PoliceRajasthan
இந்நிலையில், அதே பாணியில் ராஜஸ்தானின் ஜோத்பூரில் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரை தரையில் தள்ளி கழுத்தின் மீது காலை வைத்து மிதிப்பதான போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
போட்டோவில் தாக்கப்படும் நபர் சம்பவம் நடந்த அன்று முகமூடி அணியாமல் வெளியே வந்துள்ளார். அதனை செல்போனில் போட்டோ எடுத்துக்கொண்ட கான்ஸ்டபிள் ஒருவர், மாஸ்க் அணியாமல் ஏன் வெளியே வருகிறாய் என கேட்டுள்ளார். இதனால், போலீஸ்காரருக்கும் முகேஷ்குமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்துள்ளது. அப்போது, போலீஸ் ஒருவர் முகேஷ்குமாரின் கழுத்தில் முட்டியால் அழுத்தியுள்ளார். சில நொடிகள் வரை முகேஷ்குமாரின் கழுத்தில் போலீஸ்காரரின் முட்டி இருந்தது. நல்லவேளையாக இளைஞரின் உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை. தற்போது, இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது குறித்து விளக்கம் அளித்த ஜோத்பூர் போலீஸ் கமிஷனர் சந்த்ரா, ‘ முகேஷ்குமார் போலீசாரிடம் அத்துமீறி நடந்துள்ளார். கண்களை குத்தி விடுவதாக அவர்களை மிரட்டியுள்ளார். இதையடுத்து, போலீஸ் ஜீப்பை வரவழைத்து அவரை ஜீப்பில் ஏற்ற முயன்றுள்ளனர். அப்போது முகேஷ்குமார் போலீசாரை தாக்க துவங்கியுள்ளார். இதையடுத்து, போலீஸ்காரர் தற்காப்புக்காக அவரை பிடிக்க வேண்டியதாகி விட்டது. தங்கள் பாதுகாப்புக்காக போலீசார் இப்படி நடந்து கொள்வது வாடிக்கை தான். சீருடையில் இருக்கும் போலீசாரை தாக்க முயல்வது சமூகத்தை அவமதிப்பதற்கு சமம்’ இவ்வாறு அவர் கூறினார்.