அதிபர் டொனால்ட் டிரம்ப் நாடு முழுவதும் வன்முறை ஆர்ப்பாட்டங்களுக்கு கடுமையான பதிலை அளிப்பதாக உறுதி அளித்துள்ளார்.
திங்கள்கிழமை மாலை அவர் பேசுகையில், வாஷிங்டன் உட்பட அனைத்து பகுதிகளில் ஒழுங்கைப் பாதுகாக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வதாக டிரம்ப் உறுதியளித்தார். கடந்த வாரம் மினியாபோலிஸில் கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிலாய்ட் கொல்லப்பட்டதற்கு எதிராக மூன்று நாட்கள் நடந்த அமைதியான போராட்டங்கள் கலவரமாக மாறியுள்ளது.
மக்கள் கடைகளை சூறையாடுவதும், கொள்ளையடிப்பதும், வாகனங்களுக்கு தீவைப்பதும், போலீஸாரைத் தாக்குவதுமாக இறங்கினார். இதனால் பல இடங்களில் போலீஸாருக்கும், மக்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. கண்ணீர் புகைக்குண்டுகள், பெப்பர் ஸ்ப்ரே, ரப்பர் குண்டுகளை பயன்படுத்தி பல்வேறு இடங்களில் போலீஸார் கூட்டத்தினரைக் கலைத்தனர்
“அழிவு மற்றும் தீ விபத்துக்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், சட்டத்தை மதிக்கும் அமெரிக்கர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் கலவரத்தையும் கொள்ளையையும் நிறுத்த நான் இராணுவத்தை அணி திரட்டுகிறேன். நாட்டின் சட்டம் ஒழுங்கிற்கு நானேதான் பொறுப்பு. மாநில ஆளுநர்கள் அமைதிைய நிலைநாட்டாமல் என்ன செய்கிறீர்கள்?அமைதியைக் கொண்டுவராவிட்டால், அமெரிக்க நகரங்களில் ஆயிரக்கணக்கில் ராணுவத்தை இறக்கிவிடுவேன்” என்று டிரம்ப் வெள்ளை மாளிகையில் உள்ள ரோஸ் கார்டனில் இருந்து கூறி உள்ளார்.