செவ்வாய், 2 ஜூன், 2020

ரேஷன் கடைகளில் இப்படியா நடக்கிறது

journalist lakshmi subramanaiyan twitter : மொத்த உலகமும் கொரோனா அச்சத்தால் வீட்டிலேயே தஞ்சம் அடைந்திருக்கும் இந்த நேரத்தில் மூத்த பத்திரிக்கையாளர் லட்சுமி சுப்ரமணியன், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் மிகப் பெரிய விவாதத்தை எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிரித்துக் கொண்டிருக்கிறது. ஒருபுறம் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் சில தளர்வுகள் உடன் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதுவரை ரேஷன் பொருட்களை வாங்க ரேஷன் கடைகளுக்கு செல்லாதவர்கள் கூட கொரோனாவால் ஏற்பட்ட மிகப் பெரிய இழப்பால் ரேஷன் கார்டு மூலம் அத்தியாவசிய பொருட்களை வாங்க சென்றனர். அதற்கேற்ப தமிழக அரசும் இலவசமாக ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை, பருப்பு என அனைத்து பொருட்களையும் வழங்கி வருகிறது.

இந்த நேரத்தில் தான் மூத்த பத்திரிக்கையாளர் லட்சுமி சுப்ரமணியன் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் இருப்பது ரேஷன் கடையில் பொருட்களை வாங்கியதாக குடும்ப அட்டைதாரருக்கு வந்துள்ள குறுஞ்செய்தி. ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கி இருந்தால் இந்த மெசேஷ் வருவது இயல்பு. ஆனால் வாங்காத ரேஷன் பொருட்களுக்கு பில் கட்டப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது தான் இதில் கவனிக்க வேண்டிய செய்தி.

இந்த புகைப்படத்தை பகிர்ந்து அவர் தெரிவித்திருப்பதாவது, “பி.டி.எஸ் சார்பில் கோவையில் இருக்கும் நாங்கள் ரேஷன் வாங்கும் கடையில் இருந்து அனைத்து பொருட்களையும் வாங்கியதாக என தந்தையின் செல்போனுக்கு மெசேஷ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் பொதுமுடக்கம் காரணமாக என் பெற்றோர்கள் பல நாட்களாக சென்னையில் தான் இருக்கிறார்கள். பின்பு எப்படி அவர்கள் ரேஷன் பொருட்களை வாங்கி இருக்க முடியும்?”என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதுமட்டுமில்லை இதுப்போன்ற தவறு நிகழ்வது இது முதன்முறை அல்ல என்றும் லட்சுமி சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். கூடவே இந்த ட்விட்டர் பதிவை உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்கும் டேக் செய்துள்ளார்.லட்சுமி சுப்ரமணியனின் இந்த பதிவு சமூகவலைத்தளங்களில் விவாதத்தை எழுப்பியுள்ளது.