பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில், அதிரப்பள்ளி நீர் மின் திட்டத்திற்கு கேரள அரசு அனுமதி அளித்துள்ளது.
அதிரப்பள்ளியில் 163 மெகாவாட் திட்டத்திற்கான தொழில்நுட்ப, பொருளாதார, சுற்றுச்சூழல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கேரள மின்சாரத்துறைக்கு தடையில்லா சான்று வழங்கப்பட்டுள்ளது. இந்த சான்று ஏழு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்குள் இந்த திட்டத்தை முடித்து விட முடியும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
முன்னதாக இந்த திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பேரழிவு ஏற்படும் என்று எதிர்க்கட்சிகள், கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
அதனால் அதிரப்பள்ளி நீர் மின் திட்டத்தை கைவிடுவதாக ஆளும் மாநில அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்த திட்டத்திற்கு அரசு அனுமதி அளித்துள்ளது அம்மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சிபிஐ தலைவர் பினாய் விஸ்வம் கூறுகையில், ‘கேரள அரசின் அதிரப்பள்ளி நீர் மின் திட்டத்தின் மூலம் மாநிலத்தில் எந்த வளர்ச்சியும் ஏற்படாது. விஞ்ஞானமற்ற வளர்ச்சி நடவடிக்கைகளால் ஏற்கெனவே சுற்றுச்சூழல் சீர்குலைந்துள்ளது.
அரசாங்கம் இந்த திட்டத்தை அனுமதித்ததற்கான காரணம் என்னவென்றும் தெரியவில்லை. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் மிகப்பெரிய நீர் மின் திட்டங்களை கைவிட்டுள்ளன. ஆனால் கேரளா அவர்களிடம் இருந்து இதனை கற்றுக் கொள்ளாதது துரதிருஷ்டவசமானது. 2018ம் ஆண்டு வெள்ள பாதிப்புக்கு பிறகு, சுற்றுச்சூழலையும், மனிதர்களையும் பாதிக்கும் எந்த வளர்ச்சி திட்டங்களையும் ஏற்க மாட்டோம் என முதல்வர் பினராயி விஜயன் கூறியிருந்தார். ஆனால் தற்போது அதிரப்பள்ளி நீர் மின் திட்டத்துக்கு அனுமதி வழங்கியுள்ளார்’என குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதனிடையே காங்கிரஸ் மூத்த தலைவர் வி.எம் சுதீரன் கேரள முதல்வருக்கு இதுதொடர்பாக கடிதம் எழுதியுள்ளார். அதில், நீர் மின் திட்டத்துக்கான தடையில்லா சான்று வழங்கியதை உடனடியாக ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.