திண்டுக்கல்லில் விற்பனை செய்ய முயன்ற 5 பழமையான சிலைகளை சிலைதடுப்பு போலீசார் பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பகுதியில் உள்ள மலையின் மேல் ஆதிநாதப் பெருமாள் ரங்கநாயகி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் சங்க காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படும் ஒரு பழமையான கோவிலாகும். இந்த கோயில் தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது.
இந்த கோயிலில் தரிசனம் செய்யும் பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் உள்ளார்ந்த சக்தி இந்த கோயிலுக்கு இருப்பதால் ஏராளமான பக்தர்கள் இங்கு தரிசனம் செய்து வருகிறார்கள். பக்தர்கள் கோயிலின் மீதுள்ள பக்தியாலும், அன்பாலும் ஏராளமான காணிக்கைகளை செலுத்துகிறார்கள். 2007ம் ஆண்டு சிலர் நன்கொடையாக புதிய சிலைகளை நிறுவ முடிவு செய்து, பெருமாள் சிலை, ஸ்ரீதேவி சிலை, பூதேவி சிலை, சந்திரசேகரர் சிலை, பார்வதி சிலை என 5 உலோக வெண்கல சிலைகளை நிறுவப்பட்டது.
திண்டுக்கல் முள்ளிபாடியை சேர்ந்த சவரிமுத்து மகன் பிரபாகரன், டி.கல்லுப்பட்டியை சேர்ந்த குமார், திண்டுக்கல் சீலைவாடியை சேர்ந்த ஈஸ்வரன், வெங்கடேசன் ஆகியோர் ஆதிநாத பெருமாள் ரங்கநாயகி கோயிலில் புகுந்து பூசாரி கோயில் செயலாளர் ஆகியோரை கத்தி முனையில் மிரட்டி ஒரு அறையில் அடைத்து வைத்து விட்டு சிலைகளை திருடி சென்றனர்.
திண்டுக்கல்லில் 12 கோடி மதிப்பிலான 5 சிலைகள் விற்கப்படுவதாக சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சிலை கடத்தல் பிரிவு சிஐடி டாக்டர் ஜெயந்த் முரளி, ஐஜிபி ஆர்.தினகரன், மற்றும் சிலை கடத்தல் பிரிவு சிஐடி அதிகாரிகள் அடங்கிய குழுவினர் அதிரடி திட்டம் தீட்டி சிலைகளை பறிமுதல் செய்தனர். சிலைகளை கடத்த முயன்ற பால்ராஜ், இளவரசன், யோவேல் பிரபாகர், தினேஷ்குமார் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
source https://news7tamil.live/ancient-idols-worth-rs-12-crore-seized-4-arrested.html