மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் பொதுமக்களின் கருத்துக்கள் ஆலோசித்து வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் 2022-23 முதல் 2026-27 வரைக்கான மின் கட்டணம் உயர்வு குறித்து பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் சந்திரசேகர் தலைமையில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
பின்னர் பேசிய ஒழுங்குமுறை ஆணைய தலைவர் சந்திரசேகர், 30 நாட்கள் நேரம் பொதுமக்களுக்கு கொடுத்திருக்கிறோம். அதற்கான நேரம் தற்போது முடிந்து விட்டது. கோவையில் என்ன சொன்னார்களோ அதுதான் இங்கேயும் பேசப்பட்டது என கூறினார்.
8 கோடி பேரின் கருத்துக்களை நாங்கள் கேட்க முடியாது என தெரிவித்த அவர், வேண்டும் என்றால் உங்கள் கருத்துக்களை எழுதி அனுப்பலாம் என்றும் பொதுமக்களின் கருத்துக்கள் ஏற்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
மின்சார தட்டுப்பாடு, மின்தேவை உள்ளிட்ட பொதுமக்களின் கருத்துக்களை நாங்கள் மனதில் ஏற்றி கொண்டோம். இதற்கான முடிவுகள் ஆலோசித்து வெளியிடப்படும் என்றும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
– இரா.நம்பிராஜன்
source https://news7tamil.live/public-comments-will-be-consulted-and-published-electricity-regulatory-commission.html