நலத்திட்ட உதவிகள் நலிவுற்ற மக்களை கைதூக்கி விடுகின்றன, அவை இலவசம் ஆகாது என உச்ச நீதிமன்றத்தில் திமுக தெரிவித்துள்ளது.
தேர்தல் நேரத்தில் இலவசங்கள் வழங்கும் அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்குரைஞர் அஷ்வினி உபாத்யாய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணையின்போது தன்னையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் திமுக தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 20) விசாரணை வந்தது. அப்போது, “மனுதாரர் பஞ்சாப்பில் ஒரு அரசியல் கட்சியை எதிர்த்தவர். ஆதலால் இந்த மனுவில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. இது பொதுநல மனுவுக்கு தகுதி இல்லாதது” என்று திமுக தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
தொடர்ந்து, “ஒரு திட்டத்தை இலவசம் என்று எவ்வாறு கூற முடியும். நலத்திட்ட உதவிகள் நலிவுற்ற மக்களை கைதூக்கி விட பயன்படுகின்றன” என்று திமுக சார்பில் கூறப்பட்டது.
மேலும் திமுக மூத்த வழக்குரைஞரும் மாநிலங்களவை எம்.பி.,யுமான பி. வில்சன் தாக்கல் செய்துள்ள மனுவில், “இவ்வாறு நாம் யோசித்தால் கல்வி, மருத்துவம் போன்ற அனைத்து வசதிகளும் இலவசம் என்ற பிரிவின் கீழ் மாறும். இது மனசாட்சிக்கு விரோதமானது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி இது மாநில கொள்கையின் வழிகாட்டுதல் கோட்பாடுகள் மீதான தாக்குதல். இது தேசத்தின் கட்டமைப்பை சோசலிஷ நாட்டில் இருந்து முதலாளித்துவ நாடாக்கும் முயற்சி.
மேலும் வாக்குறுதிகள் அளிக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக அரசியலமைப்புச் சட்டத்தின்படி எந்தவொரு ஆணையும் பிறப்பிக்க இயலாது” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த வழக்கில் புதன்கிழமை (ஆகஸ்ட் 17) தலைமை நீதிபதி, மனுதாரர் இலவசம் மற்றும் மக்கள் நலத் திட்டங்களை ஆகியவை குறித்து மனுதாரர் குழப்பிக் கொள்ளல் கூடாது என்றார் என்பது நினைவு கூரத்தக்கது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/welfare-schemes-help-in-uplift-of-weaker-sections-can-not-be-termed-freebies-dmk-to-sc-497519/