30 8 2022
Chennai high court orders to take against lawyer who enquires Kallakuruchi student death case: கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக தனியாக விசாரணை நடத்தும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பார் கவுன்சிலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி ஜூலை 13 ஆம் தேதி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இதனையடுத்து மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு பெற்றோர் போராட்டம் நடத்தினர். மறுபுறும், வேறு சிலரால் பள்ளி வளாகம் சூறையாடப்பட்டது, வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
இந்தநிலையில், மாணவி ஸ்ரீமதி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பள்ளித் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி தலைமை ஆசிரியர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரையும் சின்னசேலம் போலீசார் கைது செய்தனர்.
இதனையடுத்து, அவர்கள் 5 பேரும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். அவர்கள் மனுவை பரிசீலித்த சென்னை உயர் நீதிமன்றம் 5 பேருக்கும் ஜாமீன் வழங்கியது. மேலும், தீர்ப்பில் தமிழக அரசு மருத்துவ குழுக்களின் இரு அறிக்கைகள் மற்றும் ஜிப்மர் குழு அறிக்கையின்படி மாணவியின் மரணத்திற்கு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக்கான ஆதாரங்கள் இல்லை. எனவே மாணவி மரணம் பாலியல் வன்கொடுமையோ அல்லது கொலையோ இல்லை என்பது உறுதியாகிறது. என நீதிமன்றம் கருத்து தெரிவித்து இருந்தது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த கருத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மாணவியின் பெற்றோர் மேல்முறையீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தநிலையில், இன்று கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் நிபுணத்துவம் இல்லாத வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பார் கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், நிபுணத்துவம் இல்லாத வழக்கறிஞர்கள் 2 பிரேத பரிசோதனை அறிக்கைகளையும் ஒப்பிட்டு மாறுப்பட்ட கருத்துக்களை தெரிவிக்கின்றனர். வழக்கறிஞர்கள் தனியாக விசாரணை நடத்துவது வழக்கறிஞர் தொழிலுக்கு ஏற்றது அல்ல என மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-high-court-orders-to-take-against-lawyer-who-enquires-kallakuruchi-student-death-case-502694/