செவ்வாய், 30 ஆகஸ்ட், 2022

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்; கொலைக்கான ஆதாரங்கள் இல்லை – ஐகோர்ட் கருத்து

 Chennai high court says no evidence for rape or murder in Kallakuruchi student death case: ஜிப்மர் குழு அறிக்கை மூலம் கள்ளக்குறிச்சி மாணவியின் மரணம் பாலியல் வன்கொடுமையோ அல்லது கொலையோ இல்லை என்பது உறுதியாகிறது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி ஜூலை 13 ஆம் தேதி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இதனையடுத்து மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு பெற்றோர் போராட்டம் நடத்தினர். மறுபுறும், வேறு சிலரால் பள்ளி வளாகம் சூறையாடப்பட்டது, வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

இந்தநிலையில், மாணவி ஸ்ரீமதி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பள்ளித் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி தலைமை ஆசிரியர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரையும் சின்னசேலம் போலீசார் கைது செய்தனர்.

இதனையடுத்து, அவர்கள் 5 பேரும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை கீழ்கோர்ட்டு தள்ளுபடி செய்தது. அதையடுத்து ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர்கள் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பள்ளித் தாளாளர் உள்ளிட்ட 5 பேருக்கு ஜாமீன் வழங்கி கடந்த 26-ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள் 5 பேருக்கு ஜாமீன் வழங்கிய தீர்ப்பில் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. அதில், தற்கொலை கடிதம் மற்றும் சக மாணவிகளின் சாட்சியத்தின் அடிப்படையில் வேதியியல் படிப்பதில் மாணவி சிரமப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இரு ஆசிரியர்களும் அறிவுரை கூறிய நிலையில், தற்கொலைக்குத் தூண்டினார்கள் என்பதற்கு ஆதாரம் இல்லை. மாணவர்களை நன்றாக படிக்கச் சொல்வது ஆசிரியர்களின் பணியில் ஒரு அங்கமே தவிர, தற்கொலைக்கு தூண்டுவது அல்ல.

தமிழக அரசு மருத்துவ குழுக்களின் இரு அறிக்கைகள் மற்றும் ஜிப்மர் குழு அறிக்கையின்படி மாணவியின் மரணத்திற்கு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக்கான ஆதாரங்கள் இல்லை. எனவே மாணவி மரணம் பாலியல் வன்கொடுமையோ அல்லது கொலையோ இல்லை என்பது உறுதியாகிறது. பெற்றோர் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் எதுவும் இல்லை.

மேலும், பள்ளியின் 3வது மாடியில் இருந்தது மாணவியின் ரத்தம் அல்ல, வண்ணப்பூச்சு என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்தது தவறு எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்

29 8 2022


source https://tamil.indianexpress.com/uncategorized/chennai-high-court-says-no-evidence-for-rape-or-murder-in-kallakuruchi-student-death-case-502067/