சனி, 20 ஆகஸ்ட், 2022

டோலோ 650 மாத்திரையை பரிந்துரைக்க ரூ.1,000 கோடி லஞ்சம்

 


டோலோ 650 மாத்திரையை தயாரிக்கும் நிறுவனம், அதனை பரிந்துரைக்க மருத்துவர்களுக்கு ரூ.1,000 கோடி லஞ்சம் கொடுத்ததாக உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவம் மற்றும் விற்பனை பிரதிநிதிகளுக்கான இந்திய கூட்டமைப்பு, உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சந்திரசூட்,போபன்னா அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரரான மருத்துவம் மற்றும் விற்பனை பிரதிநிதிகளுக்கான இந்திய கூட்டமைப்பு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சஞ்சய் பரிக், டோலோ 650 மாத்திரையை உற்பத்தி செய்யும் நிறுவனம் அதனை பரிந்துரைக்க மருத்துவர்களுக்கு ரூ.1,000 கோடி மதிப்பிலான இலவச பொருட்களை வழங்கியதை மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்ததாக நீதிமன்றத்தில் கூறினார்.

500மிகி வரையிலான மருந்துப் பொருட்களின் விலையை அரசு கட்டுப்படுத்துவதாகவும், அதற்கு மேல் எடை கொண்ட மருந்துப் பொருட்களின் விலையை தயாரிப்பு நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ள சஞ்சய் பரிக், இதன் காரணமாகவே டோலோ மாத்திரை 650மிகி எடையுடன் தயாரிக்கப்படுவதாகக் குறிப்பிட்டார். இதற்காக, தவறான அளவில் மருந்து சேர்க்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நீதிபதி சந்திரசூட் சமீபத்தில் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டபோது டோலோ 650 மாத்திரையைத்தான் எடுத்துக்கொண்டதாகக் கூறினார்.

தான் தெரிவித்திருப்பது சிறிய அளவிலான உண்மைகளைத்தான் என தெரிவித்த சஞ்சய் பரிக், இந்த வழக்கில் அரசு தரப்பு தனது அறிக்கையை தாக்கல் செய்த பிறகு மறைந்திருக்கும் கூடுதல் உண்மைகளை தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார்.

இது மிகவும் அதிர்ச்சி தரக்கூடிய செய்தியாக இருக்கிறது என தெரிவித்த நீதிபதி சந்திரசூட், அனைத்து உண்மைகளும் வெகு விரைவாக வெளிவர வேண்டும் என தெரிவித்தார்.

இதையடுத்து, அடுத்த 10 நாட்களுக்குள் அறிக்கை தக்கல் செய்யுமாறு அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனல் நடராஜிடம் தெரிவித்த நீதிபதிகள், அரசு தரப்பு அறிக்கை தாக்கல் செய்த பிறகு அடுத்த ஒரு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டனர்.

இதையடுத்து, இந்த வழக்கின் அடுத்த விசாரணை செப்டம்பர் 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மருந்து தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நிறுவனத்தின் சார்பில் அறிக்கை தாக்கல் செய்ய அனுமதி கோரினார். அதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. மேலும், அவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

source https://news7tamil.live/pharma-company-distributed-rs-1000-crore-freebies-to-prescribe-dolo-650mg-tablets.html