மின்சார கட்டணத்தில் சிறு குறு தொழில் முனைவோரின் கோரிக்கையை ஏற்று பரிசீலனைக்கு பின் பிக்சிடு சார்ஜ், டிமாண்ட் சார்ஜ் விலை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கோவையில் ஈச்சனாரி பகுதியில் நாளை நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த ஏற்பாடுகளை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் பார்வையிட்டார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த, செந்தில் பாலாஜி, மின்சாரத் துறையில் ஏற்பட்டுள்ள இழப்புகளால் மின்கட்டணம் உயர்ந்துள்ளதாக தெரிவித்தார். இந்த மின் கட்டண உயர்வு குறித்து சிறு குறு நடுத்தர தொழில் முனைவோர்கள் மின் கட்டண விலையை குறைப்பதற்கான கோரிக்கையை முன் வைத்துள்ளதாக தெரிவித்த அவர் முதல்வரின் உத்தரவிற்காக மின்சார துறை அதற்கான பரிசீலனை மேற்கொண்டு பிக்ஸ்ட் சார்ஜ் மற்றும் டிமாண்ட் சார்ஜ்களில் விலை மாற்றம் செய்து ஒழுங்கு முறை ஆணையம் ஓரிரு நாட்களில் தாக்கல் செய்யும் என தெரிவித்தார்.
மேலும், நாளை கோவைக்கு வருகை தர உள்ள முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத அளவில், நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் பயனாளிகளுக்கு வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், மாவட்ட ஆட்சியரின் தலைமையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் பாதிப்பும் இல்லாத அளவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மின் கட்டணங்களில் ஏதேனும் சலுகைகள் தரப்படுமா என்று கேள்விக்கு பதில் அளித்த செந்தில் பாலாஜி, இழப்புகளை சரி செய்யக்கூடிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சலுகைகள் தரக்கூடிய அளவிற்கு மின்சார வாரியம் தற்பொழுது உள்ளதா என யோசிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும், வீடுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள மின்கட்டணங்களில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் சிறு குறு நடுத்தர தொழில்களுக்கு மட்டும் விலை குறைப்பதற்கு பரிசீலனை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
தற்போது, தமிழகத்தில் திமுகவா, பாஜகவா என்ற நிலைமை ஏற்பட்டு வருகிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, நோட்டாவுடன் போட்டியிடுபவர்களை தங்களுடன் ஒப்பிட வேண்டாம் என தெரிவித்தார். மேலும், அவர்கள் கோவையில் எந்த ஒரு வார்டிலும் ஜெயிக்கவில்லை எனவும் தெரிவித்த அவர் அவர்களை எங்களுடன் ஒப்பிடுவதா எனவும் இல்லாதவர்களை(பாஜக) இருக்கின்றது போல் செய்திகளும் ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் தான் காட்டுவதாகவும் தெரிவித்தார்.
23 8 2022
source https://tamil.indianexpress.com/tamilnadu/senthil-balaji-says-electricity-charge-offer-for-msme-industries-498945/