செவ்வாய், 30 ஆகஸ்ட், 2022

ஜெ. மரணம்; சசிகலா மீது விசாரணைக்கு ஆணையம் பரிந்துரை: அமைச்சரவை ஆலோசனை

 29 8 2022

ஜெ. மரணம்; சசிகலா மீது விசாரணைக்கு ஆணையம் பரிந்துரை: அமைச்சரவை ஆலோசனை

Tamilnadu Cabinet meeting highlights: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை அறிக்கை, ஜெயலலிதா மரண விசாரணை அறிக்கைகளை சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீஷன் ஆணையத்தின் விசாரணை அறிக்கை மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கைகளை சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா, மருத்துவர் சிவக்குமார், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவ் ஆகியோரை விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக, ஆன்லைன் ரம்மியை தடை செய்வது தொடர்பாக தொழில்நுட்ப வல்லுனர்கள் குழு அமைப்பது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்றது. மேலும், ஆன்லைன் ரம்மி தொடர்பான சட்டத்தை நீதிமன்றம் மூலம் மாற்றி அமைக்க முடியாத வகையில் இயற்றவும் ஆலோசனை நடைபெற்றது.

அடுத்ததாக வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்குவதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து மக்களை பாதுகாப்பது பற்றியும், வெள்ளத்தடுப்பு, மழைநீர் வடிகால் மற்றும் பாதாள சாக்கடை பணிகளை துரிதப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

மேலும் உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்துதல், மாநில கல்விக் கொள்கை, பரந்தூர் விமான நிலையம் உள்ளிட்டவை பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-cabinet-meeting-highlights-502025/