வெள்ளி, 26 ஆகஸ்ட், 2022

சீனாவில் கடும் வறட்சி.. மிகப்பெரிய ஏரி வறண்டது.. மக்கள் தவிப்பு

 சீனாவில் கடும் வறட்சி.. மிகப்பெரிய ஏரி வறண்டது.. மக்கள் தவிப்பு

கழுகுப் பார்வையில் எடுக்கப்பட்ட போயாங் ஏரி. ஏரியிலிருந்து தோண்டப்பட்ட கால்வாய்கள், மரத்திலிருந்து பிரியும் கிளைகள் போல் உள்ளன.

சீனாவில் கடந்த சில மாதங்களாக வெப்ப அலை நிலவுகிறது. இதனால், அங்குள்ள நீர்நிலைகள் பலவற்றில் தண்ணீரின் அளவு குறைந்து வறட்சி தொடங்கியுள்ளது. புகழ்பெற்ற யாங்சே நதியும், போயாங் ஏரியும் வறண்டு காணப்படுகின்றன. வறட்சி காரணமாக நீர் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கு தொழிற்சாலைகளில் மின் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. நீர் மீன்சார உற்பத்தி பாதியளவு குறைந்துள்ளதால் மின் சிக்கன நடவடிக்கைகளில் சீனா இறங்கியுள்ளது.

நிலத்தால் சூழப்பட்ட தென்கிழக்கு மாகாணமான ஜியாங்சியில் உள்ள மிகப்பெரிய ஏரி, போயாங் ஏரி வறண்டு 25% மட்டுமே நீர் இருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏரிக்கு அருகிலுள்ள விவசாய நிலங்களுக்கு நீர் பாய்ச்சுவதற்காக பணியாளர்கள் கால்வாய் தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பகலில் வெப்பம் அதிகமாக இருப்பதால், இருட்டிய பிறகுதான் பணியாளர்கள் வேலையில் ஈடுபடுகிறார்கள் என சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடுமையான வெப்பஅலையால் மலைப்பகுதிகளில் தீப்பற்றியது. இதனால் தென்மேற்கு பகுதியில் வசித்த 1,500 பேர் வெளியேற்றப்பட்டனர். வறட்சி காரணமாக நீர்மின் நிலையங்களில் மின்சார உற்பத்தி குறைந்துள்ளதால் தொழிற்சாலைகள் உற்பத்தியை குறைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடுமையான வெப்பம் மற்றும் வறட்சியால் விவசாய நிலங்களில் பயிர்கள் வாடுகின்றன.

போயாங் ஏரியானது சராசரியாக 3,500 சதுர கிலோமீட்டர்கள் (1,400 சதுர மைல்கள்) இருக்கும், ஆனால் சமீபத்திய வறட்சியில் வெறும் 737 சதுர கிலோமீட்டர்கள் (285 சதுர மைல்கள்) என சுருங்கி விட்டது. ஆகஸ்ட் 6 முதல் வறட்சி தொடக்கியது. இதுவரை இல்லாத அளவாக நீர் இருப்பு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயம் மற்றும் பிற பயன்பாடுகளுக்கு இந்த ஏரி நீர் பயன்படுத்துவதோடு குளிர்காலத்தில் தெற்கு நோக்கி நகரும் பறவைகளுக்கு இந்த ஏரி முக்கியமானதாக உள்ளது. மேற்கு மற்றும் மத்திய சீனாவில் வெப்ப அலைகள் 40 டிகிரி செல்சியஸ் (104 ஃபாரன்ஹீட்) கடந்து பதிவாகி வருகிறது.

வரலாறு காணாத வெப்பம் நிலவுகிறது. மனிதனால் ஏற்படும் காலநிலை மாற்றத்தால் மேலும் மோசமடைகிறது என்று நெதர்லாந்தில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்தின் செஞ்சிலுவைச் சங்க காலநிலை மையத்தின் இயக்குநர் மார்டன் வான் ஆல்ஸ்ட் கூறினார். வறட்சியை கையாள்வது எப்போதுமே சற்று சிக்கலானது. வெப்பம் மற்றும் வறட்சி இரண்டும் இணைந்து மண் காய்ந்து விரைவாக வெப்பமடையச் செய்கிறது. மேலும் வலுப்படுத்துகிறது” காலநிலை
விஞ்ஞானி ஜெனிபர் பிரான்சிஸ் கூறினார்.

மேற்கு ரஷ்யாவில் நிலவும் தீவிர வளிமண்டல அழுத்தத்தின் காரணமாக இந்த ஆண்டு சீனா மற்றும் ஐரோப்பாவின்
வெப்ப அலைகளுக்கு காரணம் என்று அவர் கூறினார். வெப்ப அலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சோங்கிங் நகரில், ஷாப்பிங் மால்கள் மாலை 4 மணி முதல் 9 மணி வரை மட்டுமே திறக்க வேண்டும் என அறிவித்துள்ளனர். அதோடு மின் ஆற்றலையும் சேமிக்க அறிவுறுத்தியுள்ளனர். சீனாவில் நிலவும் அதிக வெப்பநிலை சுகாதாரம், உணவு உற்பத்தி மற்றும் சுற்றுச்சூழலை பாதித்து வருகிறது.


source https://tamil.indianexpress.com/science/its-largest-lake-is-so-dry-china-digs-deep-to-water-crops-499732/