வெள்ளி, 26 ஆகஸ்ட், 2022

சாதி பாகுபாடு சர்ச்சை; பேராசிரியை சஸ்பெண்ட்

 


சாதி பாகுபாடு சர்ச்சையில் சிக்கிய பேராசிரியை அனுராதாவை இரண்டு மாத காலத்துக்கு சஸ்பெண்ட் செய்து பச்சையப்பன் கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராக பணியாற்றி வருபவர் பேராசிரியை அனுராதா. தனது துறையில் பணியாற்றும் சக பேராசிரியர்கள், பயிலும் மாணவர்களிடயே சாதி பாகுபாடு பார்ப்பதாகவும், பட்டியலின வகுப்பினர் மீது வெறுப்புணர்வை உமிழ்ந்ததாகவும், மாணவர்களின் சாதி என்ன என்று அவர்களிடமே கேட்டறிந்து அதன்படி சில பாகுபாடுகளை காட்டியதாகவும் பேராசிரியை அனுராதா மீது தொடர்ச்சியாக பல்வேறு புகார்கள் சுமத்தப்பட்டன.

ஏற்கனவே கடந்த 2016-ம் ஆண்டில் இவர் மீது சாதி பாகுபாடு குறித்து புகார் எழுந்த நிலையில், அப்போதே பேராசிரியை அனுராதாவுக்கு விளக்கம் கேட்டு கல்லூரி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத சூழலில், அண்மையில் தனது மாணவர் ஒருவரிடம் சாதியைக் குறிப்பிட்டு பேராசிரியை அனுராதா பேசிய செல்போன் உரையாடல் சமூகவலைதளங்களில் வெளியாகி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து SFI உள்ளிட்ட மாணவர் அமைப்பினர், சக பேராசிரியர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்டோர் பேராசிரியை அனுராதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பச்சையப்பன் கல்லூரி நிர்வாகத்திடம் வலியுறுத்திய நிலையில், கல்லூரி நிர்வாகம் அவரிடம் விசாரணை நடத்தியது.

பேராசிரியை அனுராதாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதும், அவர் தவறிழைத்திருப்பதும் தெரியவந்ததன் அடிப்படையில் பேராசிரியர் அனுராதாவை இரண்டு மாத காலத்துக்கு சஸ்பெண்ட் செய்து பச்சையப்பன் அறக்கட்டளை செயலாளர் துரைக்கண்ணு நடவடிக்கை எடுத்துள்ளார்.

இரண்டு மாத காலத்துக்குப் பின் பேராசிரியை அனுராதா தரக்கூடிய விளக்கத்தைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும் என்று செயலாளர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார்.


source https://news7tamil.live/caste-discrimination-controversy-professor-suspended.html