25 08 2022
மனுஸ்மிருதி அனைத்து பெண்களையும் சூத்திரர்கள் என்று வகைப்படுத்தியுள்ளது. இது மிகவும் பிற்போக்குத்தனமானது என்று ஜே.என்.யூ பல்கலைக்கழக துணை வேந்தர் சாந்திஸ்ரீ துளிபுடி பண்டிட் கூறினார். அண்மையில், ராஜஸ்தானில் ஒரு தலித் சிறுவன் தண்ணீர் பானையைத் தொட்டதற்காக அவனுடைய ஆசிரியரால் தாக்கப்பட்டதால் காயம் அடைந்து உயிரிழந்த சம்பவத்தையும் அவர் குறிப்பிட்டார்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சாந்திஸ்ரீ துளிபுடி பண்டிட், பழங்கால சமஸ்கிருத நூலான மனுஸ்மிருதியின் பாலின பாகுபாடு குறித்து சமீபத்தில் விமர்சித்தார். மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 22) ஏற்பாடு செய்திருந்த பி.ஆர்.அம்பேத்கர் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றியபோது அவர் இவ்வாறு கூறினார்.
மனுஸ்மிருதி அனைத்து பெண்களையும் சூத்திரர்கள் என்று வகைப்படுத்தியுள்ளது. இது மிகவும் பிற்போக்குத்தனமானது என்று ஜே.என்.யூ பல்கலைக்கழக துணை வேந்தர் சாந்திஸ்ரீ துளிபுடி பண்டிட் கூறினார். அண்மையில், ராஜஸ்தானில் ஒரு தலித் சிறுவன் தண்ணீர் பானையைத் தொட்டதற்காக அவனுடைய ஆசிரியரால் தாக்கப்பட்டதால் காயம் அடைந்து உயிரிழந்த சம்பவத்தையும் அவர் குறிப்பிட்டார்.
பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் முக்கிய நூல் ‘சாதி ஒழிப்பு’ பற்றி பண்டிட் குறிப்பிடுகையில், “இந்திய சமூகம் சிறப்பாக செயல்பட விரும்பினால், சாதியை அழிப்பது மிகவும் முக்கியமானது… மிகவும் பாரபட்சமான, மிகவும் சமமற்ற இந்த அடையாளத்தில் நாம் ஏன் உணர்ச்சிவசப்படுகிறோம் என்று எனக்குப் புரியவில்லை. மேலும், இந்த செயற்கையாக கட்டமைக்கப்பட்ட அடையாளத்தை பாதுகாக்க யாரையாவது கொல்லவும் நாம் தயாராக இருக்கிறோம்.” என்று கூறினார்.
மனுஸ்மிருதி என்றால் என்ன?
மனுஸ்மிருதி அல்லது மனுவின் சட்டங்கள் என்றும் அழைக்கப்படும் மானவதர்மசாஸ்திரம், இந்து மதத்தின் தர்மசாஸ்திர இலக்கிய மரபைச் சேர்ந்த சமஸ்கிருத நூல். கிமு 2 ஆம் நூற்றாண்டுக்கும் கிபி 3 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்ட மனுஸ்மிருதி ஸ்லோக வசனங்களில் எழுதப்பட்டுள்ளது. அவை ஒவ்வொன்றும் ஓசையற்ற இரண்டு வரிகளைக் கொண்ட 16 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.
இந்த நூல் இந்து மதத்தில் மனித இனத்தின் மூதாதையராக கருதப்படும் மனுவின் புராண உருவத்திற்கு காரணமாக இருக்கிறது. இந்த நூல் ஆசிரியர் குறித்து அறிஞர்களிடையே கணிசமான விவாதம் உள்ளது. இது ஒரு காலத்தில் பல பிராமண அறிஞர்களால் தொகுக்கப்பட்டது என்று பலர் வாதிடுகின்றனர். இருப்பினும், இந்தியவியலாளர் பேட்ரிக் ஆலிவெல் (மனுவின் சட்டங்கள்: மானவ தர்மசாஸ்திரத்தின் விமர்சன பதிப்பு மற்றும் மொழிபெயர்ப்பு, 2005) மனுஸ்மிருதியின் தனித்துவமான மற்றும் சமச்சீர் அமைப்பு என்பது தனித் திறமையுள்ள நபரால் அல்லது மற்றவர்களின் உதவியுடன் ஒரு குழுவின் வலுவான தலைவரால் இயற்றப்பட்டது என்று வாதிடுகிறார்.
மனுஸ்மிருதி நூல் எதைப் பற்றியது?
மனுஸ்மிருதி பற்றி கலைக்களஞ்சியத்தின் பார்வையில், மனித வாழ்க்கையின் வெவ்வேறு நிலைகளில் உள்ள பல்வேறு சாதியினர் மற்றும் தனிநபர்களின் சமூகக் கடமைகள் மற்றும் பணிகள், வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்களின் பொருத்தமான சமூக மற்றும் பாலியல் உறவுகள், வரிகள், அரசாட்சிக்கான விதிகள், திருமண நல்லிணக்கத்தைப் பேணுதல் மற்றும் அன்றாட பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான நடைமுறைகள் அகியவற்றைப் பற்றிக் குறிப்பிடுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.
வெண்டி டோனிகர் மற்றும் பிரையன் ஸ்மித் (மனுவின் சட்டங்கள், 1991) நூலில் குறிப்பிட்டுள்ளபடி, மனுஸ்மிருதியின் மையமாக, உலகில் மனித வாழ்க்கை, அது உண்மையில் எப்படி நடக்கிறது, அது எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி விவாதிக்கிறது. அது கடமை, மதம், சட்டம் மற்றும் நடைமுறை என்று பொருள்படும் தர்மத்தைப் பற்றியது என்று அவர்கள் வாதிடுகின்றனர். அரசு மற்றும் சட்ட நடைமுறைகள் தொடர்பான சிக்கல்கள் போன்ற அர்த்தசாஸ்திரத்தின் அம்சங்களையும் இது விவாதிக்கிறது என்று கூறுகிறார்கள்.
ஆலிவெல்லின் கருத்துப்படி, “இந்த நூலின் நோக்கம் “அரசனின் இறையாண்மை மற்றும் பிராமணர்களின் வழிகாட்டுதலின் கீழ் முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட சமூகத்திற்கான ஒரு வரைபடத்தை முன்வைப்பதாகும்.” என்று குறிப்பிடுகிறார்.
இது புரோகித சாதியினரால் படிக்கப்பட வேண்டும். இது கல்லூரிகளில் இளம் பிராமண அறிஞர்களுக்கான பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம் என்றும், அந்த நேரத்தில் தர்மசாஸ்திரங்கள் குறித்த அறிஞர்களின் விவாதங்கள் மற்றும் உரையாடல்ளில் இது குறிப்பிடப்பட்டிருக்கும் என்றும் ஆலிவெல் வாதிடுகிறார்.
மனுஸ்மிருதியின் முக்கியத்துவம் என்ன?
வெண்டி டோனிகர் மற்றும் பிரையன் ஸ்மித்தின் கருத்துப்படி, “பொது யுகத்தின் ஆரம்ப நூற்றாண்டுகளில், இந்து மதத்தின் மையப் பகுதியான வர்ணாஸ்ரம-தர்மத்திற்கான (சமூக, மத கடமைகள் வர்க்கம் மற்றும் வாழ்க்கை நிலையுடன் பிணைக்கப்பட்ட) மரபுவழி பாரம்பரியத்தில் மனு அதிகாரத்தின் நிலையான ஆதாரமாக மாறியது.” என்று குறிபிட்டுள்ளனர்.
பிராமண அறிஞர்களுக்கு இது மிகவும் முக்கியத்துவமான நூல் என்று அவர்கள் வாதிடுகின்றனர் – இது மரபான மற்ற எழுத்தாளர்களால் எழுதப்பட்ட 9 உரைகளைக் கொண்டுள்ளது. இது மற்ற தர்மசாஸ்திரத்தைவிட மற்ற பழங்கால் இந்திய நூல்களால் அடிக்கடி மேற்கோள் காட்டப்பட்டது.
ஐரோப்பிய கீழைத்தேய வியலாளர்கள் (ஓரியண்டலிஸ்ட்) மனுஸ்மிருதி நூலை வரலாறு மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதினர். 1794 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் தத்துவவியலாளர் சர் வில்லியம் ஜோன்ஸ் என்பவரால் ஐரோப்பிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட முதல் சமஸ்கிருத நூல் இது. பின்னர், இது 1886 இல் மாக்ஸ் முல்லரின் திருத்தப்பட்ட தொகுதிகளாக கிழக்கின் புனித நூல்கள் வரிசையில் சேர்ப்பதற்கு முன்பு, பிரெஞ்சு, ஜெர்மன், போர்ச்சுகீஸ் மற்றும் ரஷ்ய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.
பிரிட்டிஷ் இந்தியாவில் காலனித்துவ அதிகாரிகளுக்கு, புத்தகத்தின் மொழிபெயர்ப்பு ஒரு நடைமுறை நோக்கத்திற்கு உதவியது. ஆலிவெல் கருத்துப்படி, “1772 ஆம் ஆண்டில், கவர்னர்-ஜெனரல் வாரன் ஹேஸ்டிங்ஸ், “நெடுங்காலமாகத் தொடரும், பழங்காலத்திலிருந்து மாறாமல் இருப்பதாக நம்பப்படும் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் சட்டங்களை செயல்படுத்த முடிவு செய்தார். இந்துக்களைப் பொறுத்தவரை, தர்மசாஸ்திரங்கள் ஆங்கிலேயர்களால் சட்டங்களாக பார்க்கப்பட்டதால், இந்தியாவில் அப்படிப் பயன்படுத்தப்பட்டாலும் இல்லாவிட்டாலும், அவை ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மனுஸ்மிருதி சர்ச்சைக்குரியது ஏன்?
பழங்கால நூல் மனுஸ்மிருதி 4 முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது: 1) உலகத்தின் தோற்றம் 2) தர்மத்தின் ஆதாரங்கள். 3) நான்கு சமூக வர்க்கங்களின் தர்மம். 4) கர்மாவின் விதி, மறுபிறப்பு மற்றும் இறுதி மோட்சம். மூன்றாவது பிரிவு மிக நீண்ட மற்றும் மிக முக்கியமான பகுதி. நான்கு வர்ண முறையின் படிநிலையையும் ஒவ்வொரு சாதியினரும் பின்பற்ற வேண்டிய விதிகளையும் கடைபிடிப்பதில் இந்த நூல் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளது. இந்த நூலின் ஆசிரியரைப் பொறுத்தவரை, பிராமணன் மனித இனத்தின் சரியான பிரதிநிதியாக கருதப்படுகிறான், டோனிகர் மற்றும் ஸ்மித்தின் கருத்துப்படி, அந்த வரிசையில் கீழ்நிலைக்கு தள்ளப்பட்ட சூத்திரர்களுக்கு மேல்நிலையில் உள்ள சாதிகளுக்கு சேவை செய்யும் கடமை மட்டுமே வழங்கப்படுகிறது. சில வரிகளில் பெண்களை பிறப்பின் அடிப்படையில் அவர்களுக்கு எதிரான மிகவும் தவறான கருத்துகளும் உள்ளன.
இந்த நூலில் சர்ச்சைக்குரியதாகக் கருதப்படும் சில வரிகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:
அத்தியாயம் 8, ஸ்லோகம் 21: “ஒரு சூத்திரன் ஒரு அரசனுக்கான சட்டத்தை விளக்கினால், அவனுடைய சாம்ராஜ்யம் சேற்றில் மூழ்கிய பசுவைப் போல, அவன் நிராதரவாகப் பார்க்கப்படுவான்”
அத்தியாயம் 8, ஸ்லோகம் 129: “சூத்திரன் திறமையானவனாக இருந்தாலும்கூட அவன் செல்வத்தை குவிக்கக்கூடாது; ஏனெனில் ஒரு சூத்திரன் செல்வந்தனானால், அவன் பிராமணர்களைத் துன்புறுத்துகிறான்.”
அத்தியாயம் 8, ஸ்லோகம் 371: “ஒரு பெண்… தன் கணவனுக்கு துரோகம் செய்தால், பலர் கூடும் பொது இடத்தில் அரசன் அவளை நாய்களுக்கு இரையாக்க வேண்டும்”
அத்தியாயம் 5, ஸ்லோகம் 148: “ஒரு பெண் குழந்தையாக இருக்கும்போது அவள் தன் தந்தையின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்; இளம் பெண்ணாக இருக்கும்போது அவள் கணவனின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும், அவளுடைய கணவன் இறந்த பிறகு, அவளுடைய மகன்களின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். அவள் ஒருபோதும் சுதந்திரமாக வாழ முற்படக்கூடாது”
அத்தியாயம் 2, ஸ்லோகம் 13: “ஆண்களைக் கெடுப்பது பெண்களின் இயல்பு. அந்த வகையில், வசீகரிக்கும் இளம் பெண்களின் முன்னிலையில் விவேகமுள்ள ஆண்கள் ஒருபோதும் பாதுகாப்பை துறக்கக் கூடாது.”
(2004 இல் பேட்ரிக் ஆலிவெல் மற்றும் சுமன் ஆலிவெல் மொழிபெயர்த்த மனுவின் சட்டத் தொகுப்புகளில் இருந்து மேற்கோள் காட்டப்பட்ட ஸ்லோகங்கள் இவை)
பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், பாலினம் மற்றும் சாதிய ஒடுக்குமுறையின் ஆதாரமாகக் கருதப்படும் மனுஸ்மிருதியை பொதுவில் எரித்தார்.
source https://tamil.indianexpress.com/explained/manusmriti-ancient-sanskrit-text-recently-under-controversy-499968/