வெள்ளி, 26 ஆகஸ்ட், 2022

உக்ரைனில் அதிபர் எச்சரித்தது போன்று ரஷ்யா தாக்குதல் – 22 பேர் உயிரிழப்பு

 25 8 2022

உக்ரைனில் சுதந்திரதினமான நேற்று ரஷ்யா தாக்குதல் நடத்தியதில் 22 பேர் உயிரிழந்தனர்.


உக்ரைனில் நேற்று சுதந்திரதினம் கொண்டாடப்பட்டது. ஏற்கனவே, சுதந்திரதினத்தன்று ரஷ்யா மிகப்பெரிய தாக்குதலை நடத்தும் என சில நாட்களுக்கு முன்பு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி நாட்டு மக்களுக்கு எச்சரித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ரஷ்யா தாக்குதல் நடத்தியதால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். சுதந்திர தினத்தையொட்டி அணிவகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன. அப்போது சாப்லின் நகரில் ரஷ்ய பாதுகாப்புப் படை இரண்டு முறை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் பொதுமக்கள் 22 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.

 

அப்போது நகரின் ரயில் தீ வைத்து எரிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. ரஷ்யாவின் இந்தத் தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் ஆண்டனி பிளிங்கன் கூறும்போது, உக்ரைனில் பொதுமக்கள் பயணித்த ரயில் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் இதுவரை 22 பேர் பலியாகினர் என்றார்.

அதே நேரத்தில் இந்தக் குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது. குடிமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படவில்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது. 6 மாதங்களுக்கு மேலாக நடக்கும் ரஷ்ய – உக்ரைன் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான உக்ரைன் மக்கள் வேறு நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

– இரா.நம்பிராஜன்

source https://news7tamil.live/russia-attack-on-ukraines-independence-day-22-killed.html