ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2022

சூரிய மற்றும் காற்றாலை மின் உற்பத்தியில் தமிழ்நாட்டிற்கு உள்ள வாய்ப்புகள் என்ன தெரியுமா?

 


சூரிய மற்றும் காற்றாலை மின் உற்பத்தியில் தமிழ்நாடு மற்றும் கேரளாவுக்கு உள்ள பிரகாசமான வாய்ப்புகள் என்ன என்பது குறித்த புனே, இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தின் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளை நாம் உணரத் தொடங்கியுள்ளோம். இதன் விளைவுகள் அடுத்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (காற்று & சூரிய சக்தி) உற்பத்தியில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்று புனேவில் உள்ள இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தின் முக்கிய ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த ஆய்வறிக்கையின் படி, இந்தியாவின் பிற பகுதிகளில் சூரிய மற்றும் காற்றாலை உற்பத்தி சரிவைச் சந்திக்க வாய்ப்புள்ளது. அதே நேரம், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்குச் சாதகமான சூழல் நிலவ வாய்ப்புள்ளது என்று புனே, இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தின் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மேலும், மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் (MNRE) வெளியிட்டுள்ள ஜூன் 2022 தரவுகளின்படி, தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தின் மொத்த திறன் 16,723 மெகாவாட்டாக (MW) உள்ளது. கேரளாவின் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தின் மொத்த திறன் 871 மெகாவட்டாக (MW) உள்ளது. இந்தியாவில் “காற்று மற்றும் சூரிய ஆற்றல் பற்றிய பகுப்பாய்வு” என்று தலைப்பில் ஆய்வு மதிப்பீடு செய்யப்பட்டு ‘கரண்ட் சயின்ஸ்’ இதழில் வெளியிடப்பட்டது.

மேலும், மத்திய அரசின் Ministry of Earth Sciences அமைச்சகத்தின் கீழ் இயங்கும் IITM (Pune), நியூயார்க் பல்கலைக்கழகம், அபுதாபி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளைச் சேர்ந்த பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்ற இந்த ஆய்வை ஆராய்ச்சியாளர்களான TS ஆனந்த், தீபா கோபாலகிருஷணன், பார்த்த சாரதி முகபாத்யாய் ஆகியோர் தலைமை தாங்கியுள்ளனர். இந்தியாவின் அடுத்த 40 ஆண்டுகளுக்குத் தேவையான காற்று மற்றும் சூரிய ஆற்றலை ஆய்வு செய்ய, கால நிலை மாற்றம் தொடர்பாக அமைக்கப்பட்ட அரசு குழுக்கள் (IPCC), பரிந்துரைத்த நவீன காலநிலை மாதிரிகளைப் பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் படி இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் சூரிய கதிர்வீச்சு குறைவாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது. குறிப்பாகப் பருவ மழைக் காலங்களான ஜூன் முதல் நவம்பர் வரையில் சூரிய மின் உற்பத்தி வெகுவாக குறையும் என்று கணிக்கப்படுகிறது. ஆனால், இந்தியாவின் மற்ற பகுதிகளை விடத் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் சூரிய உற்பத்தித் திறன் சிறப்பாகவே இருக்கும் என்றும், கணிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் காலங்களில் மேகமூட்டம் குறைவாகவே இருக்கும் என்று ஆய்வாளர் பார்த்தசாரதி முகோபாத்யாய் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் எரிசக்தித் துறை அமைச்சகத்தின் சார்பாக ஆகஸ்ட் 2-ஆம் தேதி மாநிலங்களவையில் வெளியிடப்பட்ட தரவுகளின் படி, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் சூரிய மின்சார உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் 2016-ஆம் ஆண்டு 1,062 MW-ஆக இருந்த சூரிய மின் உற்பத்தி, கடந்த 2021 ஏப்ரல் முதல் 2022 மே வரையிலான காலகட்டத்தில் 8,605 மில்லியன் யூனிட் வரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. மேலும், கேரளாவில் 2016-ஆம் ஆண்டு வெறும் 13 மெகாவாட்டாக இருந்த சூரிய மின்சார உற்பத்தி, 2021 ஏப்ரல் முதல் 2022 மே வரை 539 MW-ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டின் சமீபத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்திக் கொள்கையின் படி, படுத்த 10 ஆண்டுகளில் 20000 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மின் சேமிப்பு கட்டுமானத்தைப் பலப்படுத்துவது, நீர் மின் திட்டங்கள் மூலம் 3000 MW உற்பத்தி செய்வது, 2000 மெகாவாட் எரிவாயு அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்கள் ஆகியவற்றை இலக்காகக் கொண்டுள்ளது. அதேபோன்று கேரள அரசு நடப்பாண்டு தொடக்கத்தில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சியை நோக்கிய கவனம் செலுத்தத் துவங்கியுள்ளது. அதன்படி 2050-ஆம் ஆண்டுக்குள் கார்பன் சமநிலை கொண்ட மாநிலமாகக் கேரளாவை மாற்றுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒட்டுமொத்த சூரிய மின்சார உற்பத்திக்கான கட்டமைப்புகளை நிறுவுவதில் கேரளா சற்று பின்தங்கியுள்ளது எதிர்காலத்தில் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் காற்றின் வேகம் அதிகமாகும். இதனால், இத்திட்டம் சாத்தியம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கேரளாவில் எதிர்மறையான போக்கைக் கொண்ட பருவமழைகளைத் தவிர அனைத்து பருவங்களிலும் காற்றின் வேகம் எதிர்காலத்தில் அதிகரிக்கும் என்று பார்த்தசாரதி முகோபாத்யாய் கூறியுள்ளார்.

மேலும், இந்தியாவின் மொத்த காற்றாலை மின் உற்பத்தியான 40.79 ஜிகாவாட்ஸ் (GW) தமிழ்நாடு 24.2% பங்களிக்கிறது. அதாவது 9,867 மெகாவாட். கேரளாவின் காற்றாலை பங்களிப்பு 605 MW என மதிப்பிடப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின் படி, 2030யில் இந்தியாவின் மொத்த மின் தேவையில் 50% புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் மூலம் ஈடுசெய்யப்படும் என்ற இலக்கை நோக்கிய இந்தியாவின் பயணத்திற்கு இந்த ஆய்வறிக்கை அவசியமாகிறது. கிளாஸ்கோ COP26, மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, இந்தியா புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில், 500GW மின் உற்பத்தியும், அதில் 300GW சூரிய ஆற்றலில் பெறப்படும் என்றும் உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.

கால நிலை மாற்றம் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், அதனை எதிர்கொள்ள புதிய தொழில் நுட்பங்களுடன் நம் நிறுவனங்கள் தயாராக வேண்டும் என்று முகோபாத்யாய் வலியுறுத்தியுள்ளார். கடந்த ஆகஸ்டு 2, 2022-ஆம் ஐ.ஐ.டி.எம் புனே-வின் ” இந்த ஆய்வறிக்கையைக் குறிப்பிட்டு, மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங், காலநிலை மாற்றத்தால், இந்தியாவில் சூரிய & காற்றாலை மின் உற்பத்தி வருங்காலத்தில் பாதிக்கப்படக்கூடும் என்று இந்த ஆய்வு முடிவுகளைக் கவனத்தில் கொண்டுள்ளதாகக் கூறுகிறார். இந்த சிக்கலைத் தவிர்க்க அரசு பல்வேறு திட்டங்களை வகுத்திருப்பதாகக் கூறுகிறார்.

அண்மைச் செய்தி: ‘‘மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எவ்விதமான தவறுகளும் இல்லை’ – எய்ம்ஸ் மருத்துவக்குழு’

அதன்படி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் புதிய தொழில் நுட்பங்களைக் கண்டறிவதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும் மிகப்பெரிய காற்றாலைகளை அமைத்தல், துல்லியமான கணிப்புகளைப் பெறுவது மற்றும் சூரிய மின் கலன்களின் செயல்களை அதிகரிப்பது குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள நிதி ஒதுக்குவதாகத் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வு குறித்து கருத்து தெரிவிக்கும் Dr. Anjal Prakash, Research Director and Adjunct Associate Professor with the Bharti Institute of Public Policy at the Indian School of Business, சூரிய & காற்று ஆற்றலின் எதிர்கால திறன் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகளில் இது மிகவும் முக்கியத்துவம் பெறுவதாகக் கூறுகிறார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் இந்தியா தனக்கு உள்ள வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்தத் தவறுவதை அஞ்சலி பிரகாஷ் சுட்டிக்காட்டுகிறார்.

மேலும் எதிர்கால சவால்களைச் சமாளிக்கக் கொள்கை மற்றும் வணிக முடிவுகளை எடுப்பதற்கு இவ்வாய்வு எளிதாக இருக்கும் என்றும் கூறுகிறார். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சூரிய ஒளி மின் ஆற்றலை உற்பத்தி செய்வதைத் துரிதப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார், மானியங்கள் கொடுக்கப்பட்டாலும், நிர்வாகத்தில் உள்ள நடைமுறை சிக்கலின் காரணமாக வீடுகளில் சூரியசக்தி அமைப்புகளை நிறுவ முடியவில்லை. இதை புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்று, தனிநபர்கள் சூரிய மற்றும் காற்றாலை மூலமாக ஆற்றலைப் பெறுவதை எளிதாகக் கண்டறியும் குழல் அமைப்பை உருவாக்க வேண்டும். இங்குத் தொழில்முனைவோரின் பங்கு மிகவும் முக்கியமானது, அதையும் இந்த ஆய்வின் மூலம் வலுப்படுத்த முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

source https://news7tamil.live/do-you-know-the-potential-of-tamil-nadu-in-solar-and-wind-power-generation.html