வெள்ளி, 26 ஆகஸ்ட், 2022

போன்களில் பெகாசஸ் ஸ்பைவேர் இருந்ததற்கு உறுதியான ஆதாரம் இல்லை – சுப்ரீம் கோர்ட்

போன்களில் பெகாசஸ் ஸ்பைவேர் இருந்ததற்கு உறுதியான ஆதாரம் இல்லை – சுப்ரீம் கோர்ட்

பெகாசஸ் ஸ்பைவேர் உளவு மென்பொருள் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில், மூன்று பேர் கொண்ட தொழில்நுட்பக் குழு சமர்ப்பித்த அறிக்கையைப் படித்த பிறகு, “5 போன்கலில் அவர்கள் சில மால்வேர் வைரஸ்களைக் கண்டுபிடித்தனர். ஆனால், அது பெகாசஸின் மால்வேர் என்று அர்த்தமல்ல” என்று மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் தலைமை நீதிபதி என்.வி. ரமணா கூறினார்.

இஸ்ரேலின் என்.எஸ்.ஓ குரூப் உளவு மென்பொருளான பெகாசஸ் ஸ்பைவேர் மென்பொருளை கண்காணிப்பதற்கு அனுமதியின்றி பயன்படுத்தியதாக எழுந்த புகாரை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆய்வு செய்ய நியமித்த தொழில்நுட்பக் குழு, 29 போன்களை ஆய்வு செய்து அவற்றில் 5 போன்களில் சில மால்வேர் இருப்பதைக் கண்டறிந்ததாக இந்திய தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன்பு வியாழக்கிழமை தெரிவித்தது. 


பெகாசஸ் ஸ்பைவேர் தொர்டர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட தொழில்நுட்பக் குழு சமர்ப்பித்த அறிக்கையைப் படித்த பிறகு, “5 போன்களில் அவர்கள் சில மால்வேர் வைரஸ் பொருளைக் கண்டுபிடித்தனர். ஆனால், அது பெகாசஸின் மால்வேர் என்று அர்த்தமல்ல” என்று மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில், தலைமை நீதிபதி என் வி ரமணா கூறினார்.

தலைமை நீதிபதி ரமணா, அரசாங்கம் இந்த குழுவுடன் ஒத்துழைக்கவில்லை என்றும், குழுவின் நடவடிக்கைகளிலும் உச்ச நீதிமன்றம் முன்னெடுத்த அதே நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டதாகவும் கூறினார்.

போன்களை சமர்ப்பித்த 29 பேரில் சிலர் அறிக்கையை பகிரங்கமாக வெளியிட வேண்டாம் என்று கோரிக்கை வைத்துள்ளதாக தலைமை நீதிபதி கூறுகிறார். எனவே எந்தெந்த பகுதிகளை பகிரங்கப்படுத்தலாம் என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கும்.

நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அமர்வு, தொழில்நுட்பக் குழுவின் அறிக்கை மற்றும் மேற்பார்வை நீதிபதி (ஓய்வு) நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் ஆகியோரின் அறிக்கையை ஆய்வு செய்தது. நீதிபதி ரவீந்திரனின் அறிக்கையை அது தனது வலைப்பக்கத்தில் பதிவேற்றுவதாக நீதிபதிகள் அமர்வு கூறியது.

தொழில்நுட்பக் குழு அறிக்கையைப் பொறுத்தவரை, இந்த குழுவிடம் தங்கள் போன்களைக் கொடுத்தவர்களில் சிலர், முக்கியமான தகவல்கள் இருக்கலாம் என்பதால் அறிக்கையை பகிரங்கப்படுத்த வேண்டாம் என்று கோரியதாக உச்ச நீதிமன்ற நீதிபதி அமர்வுகள் கூறியது. எனவே, தொழில்நுட்பக் குழு அறிக்கையின் எந்தப் பகுதிகளை பொது வெளியில் வெளியிடலாம் என்பதை முடிவு செய்யும் என்று நீதிபதிகள் அமர்வு கூறியது.

நீதிபதி சூர்ய காந்த், “நாங்கள் அறிக்கையை ஆய்வு செய்வோம், நாங்கள் கண்டறிந்த எந்த உள்ளடக்கத்தையும் பொது வெளியில் வைக்கலாம். அந்த பகுதியை உங்களுடன் பகிர்ந்து கொள்வோம்” என்று கூறினார்.

பெகாசஸ் உளவு மென்பொருளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதற்காகக, சுதந்திரமான விசாரணையைக் கோரி தாக்கல் செய்யப்பட்ட 12 மனுக்களின் மீது தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், “மனுதாரர்கள் இந்த நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு முதன்மையான சில விஷயங்களை பதிவு செய்துள்ளனர். மனுதாரர்களால் அங்கீகரிக்கப்பட்ட எந்த ஒரு உண்மைக்கும் குறிப்பிட்ட மறுப்பு இந்திய ஒன்றியத்தால் இல்லை. இந்திய ஒன்றியத்தின் பதிலளிப்பாளர் தாக்கல் செய்த ‘வரையறுக்கப்பட்ட பிரமாணப் பத்திரத்தில்’ மிகவும் சாதாரணமான மற்றும் தெளிவற்ற மறுப்பு மட்டுமே உள்ளது. இது போதுமானதாக இருக்க முடியாது. இத்தகைய சூழ்நிலையில், மனுதாரர்கள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்காக முன்வைக்கப்பட்ட வழக்கை ஏற்றுக்கொள்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.

உச்ச நீதிமன்றத்தின் முன் எடுத்த அதே நிலைப்பாட்டை பெகாசஸ் கமிட்டியின் முன் அரசு எடுத்ததாகவும், விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் தலைமை நீதிபதி ரமணா குறிப்பிடுகிறார்.

இந்த விசாரணையின் போது, ​​மத்திய அரசு தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுத்து சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு சுருக்கமான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தது. மேலும், இந்த விவகாரம் தேசிய பாதுகாப்பு கேள்விகளை உள்ளடக்கியது. எனவே, விவரங்களை பொது பிரமாணப் பத்திரத்தில் வைத்து பொது வெளியில் விவாதப் பொருளாக மாற்ற விரும்பவில்லை என்று கூறியது. இந்த பிரச்னையை ஆராயும் நிபுணர்கள் குழுவிடம் விவரங்களை வெளியிடுவதாக அது கூறியது. கமிட்டி அமைக்க அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஆனால், “தேசிய பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில், நீதித்துறை மறுஆய்வு செய்வதற்கான வரம்பு குறைவாக உள்ளது என்பது சட்டத்தின் தீர்க்கமான நிலைப்பாடு” என்று இந்த அமர்வு ஒப்புக்கொண்டது. அதில், “ஒவ்வொரு முறையும் தேசிய பாதுகாப்பு என்ற அச்சம் எழுப்பப்படும்போது, அரசாங்கத்திற்கு கடந்து செல்ல அனுமதி கிடைத்துவிடும் என்று அர்த்தமில்லை. தேசிய பாதுகாப்பு என்பது வெறும் குறிப்பால் மட்டுமே நீதித்துறையை ஒதுக்கித் தள்ளும் பிழையாக இருக்க முடியாது. இந்த நீதிமன்றம் தேசப் பாதுகாப்புக் களத்தை ஆக்கிரமிப்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்றாலும், நீதித்துறை மறுஆய்வுக்கு எதிராக சர்வ சாதாரணமாகத் தடை விதிக்க முடியாது… அரசாங்கம் தேசியப் பாதுகாப்பைக் கோருவது நீதிமன்றத்தை ஒரு பார்வையாளனாக ஆக்கிவிடாது என்று கூறினார்.

அக்டோபர் 27, 2021-இல் தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அமர்வு, கண்காணிப்பதற்கு பெகாசஸ் உளவு மென்பொருளை அனுமதியில்லாமல் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க தொழில்நுட்பக் குழுவை நியமித்தது. இந்த குழுவின் செயல்பாட்டை மேற்பார்வையிட நீதிபதி (ஓய்வு) ரவீந்திரனையும் நியமித்தது. அவருக்கு உதவி செய்ய முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அலோக் ஜோஷி மற்றும் சைபர் பாதுகாப்பு நிபுணர் டாக்டர் சந்தீப் ஓபராய் ஆகிய இரண்டு நிபுணர்கள் நியமிக்கப்பட்டனர்.

source https://tamil.indianexpress.com/india/supreme-court-pegasus-spyware-case-499843/