ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2022

கோவையில் ஜமாத்தின் ஒப்புதல் பெற்று விநாயகர் சதுர்த்தி விழா நடத்த ஐகோர்ட் அனுமதி

 

கோவையில் ஜமாத்தின் ஒப்புதல் பெற்று விநாயகர் சதுர்த்தி விழா நடத்த ஐகோர்ட் அனுமதி

இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் ஹவுசிங் போர்டு காலனியில் விநாயகர் சிலைகளை நிறுவ மற்றும் விழா கொண்டாட உள்ளூர் ஜமாத்தின் ஒப்புதல் பெற்று அனுமதி வழங்க கோயம்புத்தூர் காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழா வரும் 31ஆம் தேதி மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், உக்கடம் தெற்கு புல்லக்காடு குடியிருப்புப் பகுதியில் விநாயகர் சிலை நிறுவவும், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடவும் அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி மகாலட்சுமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தங்கள் பகுதியில் வசிப்பவர்கள் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட விரும்புவதாகவும், இஸ்லாமியர்கள் உள்பட
மற்ற சமூகத்தினரும் விழாவில் பங்கேற்க விரும்புவதாகவும் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ஒப்புக்கொண்டதாகவும், அவர்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என தெரிவித்ததகாவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

போலீஸ் தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு வக்கீல், இப்பகுதி இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, விநாயகர் சதுர்த்தி விழா நடத்த ஆட்சேபமில்லை என ஜமாத் அமைப்பிடம் இருந்து உறுதிமொழி பத்திரம் பெற்று, அரசு வழிமுறைகளை பின்பற்றி விழா நடத்தப்படும் என உத்தரவாதம் பெற்ற பின் காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டார்.

மேலும், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்திற்குள் விநாயகர் சிலையை நிறுவி கொண்டாடலாம் எனவும், சிலையுடன் ஊர்வலம் செல்லக்கூடாது எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/grant-nod-to-install-ganesha-idol-after-obtaining-local-jamath-consent-hc-501095/