திங்கள், 29 ஆகஸ்ட், 2022

லிபியாவில் மோதல் : 32 பேர் உயிரிழப்பு – 159 பேர் படுகாயம்

 

லிபியாவில் போட்டி அரசுகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 32 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

லிபியாவில் போட்டி அரசுகளுக்கு இடையிலான மோதல் தற்போது உச்சகட்டத்தை அடைந்திருப்பதால், அங்குள்ள மக்கள் தவித்துக்கொண்டிருக்கின்றனர். எண்ணெய் வளம் மிக்க நாடான லிபியா வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ளது. இந்நாட்டின் அதிபராக இருந்த முஅம்மர் அல்-கடாஃபியின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக, 2011-ல் நேட்டோ அமைப்பின் ஆதரவுடன் பெரும் புரட்சி நடந்தது.

அதில் அவர் கொல்லப்பட்டார். அதன் பின்னர் உள்நாட்டுப் போர், கலவரம், வன்முறைச் சம்பவங்கள் காரணமாக லிபியாவில் போர் பதற்றம் நிலவி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகத்தான் அங்கு பெரிய அளவிலான போர் பதற்றம் இல்லாமல் இருந்து வருகிறது.

இந்நிலையில், முன்னாள் ராணுவத் தளபதி ஹைதாம் தஜோரி தலைமையிலான திரிப்போலி புரட்சியாளர்களின் படையணி எனும் போராளிக் குழுவுக்கும், அப்தெல்-கனி அல்-கிக்லி தலைமையிலான குழுவுக்கும் இடையில் தலைநகர் திரிப்போலியில் தற்போது மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் பிற பகுதிகளிலும் கலவரம் பரவியது. இதில், மருத்துவமனைகள், குடியிருப்பு கட்டடங்கள் உள்ளிட்டவை சேதமாயின.

 

இந்த மோதலில் 32 பேர் உயிரிழந்துவிட்டதாகவும், 159-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனிடையே, திரிபோலியில் யெல்படும் ஒரு தரப்பினர் நகர் முழுவதும் ஆயுதங்களுடன் வலம் வருவதால் மோதல் போக்கு மீண்டும் வெடிக்கும் என்ற அச்சத்தில் அந்நாட்டு மக்கள் உறைந்து போய் உள்ளனர்.

 

– இரா.நம்பிராஜன்


source https://news7tamil.live/conflict-in-libya-32-killed-159-injured.html