சனி, 20 ஆகஸ்ட், 2022

‘சொற்ப பாக்கியைக் காரணம் காட்டி, நாட்டையே இருளில் மூழ்கடிப்பதா?’ – சி.பி.ஐ (எம்)

 

சொற்ப பாக்கியைக் காரணம் காட்டி, நாட்டையே இருளில் மூழ்கடிப்பதா? என சி.பி.ஐ (எம்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சி.பி.ஐ (எம்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனியார் பெருமுதலாளிகளின் லாப வேட்டைக்கு ஆதரவாக, மாநிலங்களின் மின் நுகர்வினை கட்டுப்படுத்தும் கொள்கையை மத்திய அரசு நிர்ப்பந்திக்கிறது. இதனால், தமிழ்நாடு உட்பட 13 மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மோடி அரசு தனது கொள்கையை உடனடியாக திரும்பப் பெற்று, தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்திட வேண்டுமென சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழு வலியுறுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், மின்சாரம், மக்களின் இன்றியமையாத அடிப்படைத் தேவையாக உள்ளது எனத் தெரிவித்துள்ள அவர், அன்றாட வாழ்க்கைக்கும், வேலைவாய்ப்பிற்கும் மின்சாரமே அடிப்படையாகும். அனைவருக்கும் தடையற்ற மின்சாரத்தை, நியாயமான கட்டணத்தில் வழங்கிடும் கடமையை மாநில அரசுகளே ஏற்றுள்ளன. அதே சமயத்தில் மத்திய அரசாங்கம், தனியார் பெருமுதலாளிகளின் லாபத்தை மனதில் கொண்டு, மின்சார கொள்கையை மாற்றியமைக்க முயல்கிறது. தனது போக்கிற்கு மாநில அரசுகளையும், மின்வாரியத்தையும் நிர்ப்பந்திக்கிறது. இதனால் ஏற்படும் சுமை அனைத்தும் சாமானிய மக்களின் தலையிலேயே விடிகிறது எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும், தனியாரிடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தைத் தமிழ்நாட்டின் மீது மத்திய அரசாங்கம் கொடுத்து வருகிறது எனத் தெரிவித்துள்ள அவர், அதன் காரணமாக நுகர்வோருக்குக் கடுமையான கட்டணச் சுமை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மின் விநியோகத்திலும் லாப நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட விதிகள் புகுத்தப்படுவதாகக் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். மேலும், மோடி அரசின் இந்த போக்கை முன் உணர்ந்துதான் மின்சார திருத்த மசோதாவிற்குக் கடுமையான எதிர்ப்பு எழுந்த பிறகு நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.

தமிழ்நாடு பாக்கி வைத்திருப்பதாகச் சொல்லப்படும் ரூ. 926 கோடியோ, ஒட்டுமொத்தமாக மாநிலங்கள் பாக்கி வைத்திருக்கும் ரூ. 5085 கோடிகள் என்பதோ மத்திய அரசால் அனுமதிக்க முடியாத தொகை அல்ல. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களை நடத்தும் விரல்விட்டு எண்ணக்கூடிய பெருமுதலாளிகள் ரூ.2 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் கட்டணம் பாக்கி வைத்துள்ளார்கள் எனத் தெரிவித்துள்ள அவர், அவர்கள் அந்த தொகையைச் செலுத்திட ஆண்டுக்கணக்கில் அவகாசம் கொடுக்கும் மோடி அரசுதான் – 12 மாநிலங்களில் வாழும் 64 கோடி மக்களின் வாழ்க்கையை இருளில் தள்ளுவோம் என்று மிரட்டுகிறது எனச் சாடியுள்ளார்.

அண்மைச் செய்தி: ‘‘கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளது’ – காவல் ஆணையர் அன்பு ஐபிஎஸ்’

மேலும், தனியார் பெருமுதலாளிகள் வங்கியில் கடனாகப் பெற்ற சுமார் 11 லட்சம் கோடிகளை வராக்கடனாகத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ள அவர், அந்த நிறுவனங்களின் பட்டியலைக் கூட வெளியிட அரசு தயங்குகிறது. இதனோடு ஒப்பிட்டால் மாநிலங்களின் பாக்கித் தொகை ஒன்றுமே இல்லை. ஆனாலும் கூட அதனைக் காரணமாக்கி, பட்டியல் வெளியிட்டு, தனது கொள்கைகளை அமலாக்க நிர்ப்பந்திப்பதன் நோக்கம் என்ன? பெருமுதலாளிகளுக்கு வெண்ணெய்யும், சாமானிய மக்களுக்குச் சுண்ணாம்பும் தடவுவதுதான் மோடி அரசின் கொள்கை என்பதை மீண்டும் மீண்டும் அம்பலப்படுத்துகிறது எனக் கூறியுள்ள அவர், சாமானிய மக்களின் மீதும், சிறு குறுந் தொழில்களின் மீது மின்வெட்டைச் சுமத்தும் கொள்கையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு கண்டிப்பதாகவும், உடனடியாக தனது கொள்கையைத் திரும்பப் பெற்று அனைத்து மக்களுக்கும் தடையில்லாத மின்சாரத்தை நியாயமான கட்டணத்தில் உறுதி செய்திட வேண்டுமென வலியுறுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.


source https://news7tamil.live/should-the-country-be-plunged-into-darkness-on-the-pretext-of-arrears.html