புதன், 31 ஆகஸ்ட், 2022

காங்கிரஸ் தலைவர் தேர்தல்.. நேரு குடும்பம் இல்லை? .. வரலாறு கூறுவது என்ன?

 30 08 2022

காங்கிரஸ் தலைவர் தேர்தல்.. நேரு குடும்பம் இல்லை? .. வரலாறு கூறுவது என்ன?

காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 28 சோனியா காந்தி தலைமையில் நடந்த காரிய கமிட்டி கூட்டத்தில் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி ஆகஸ்ட் 17இல் தேர்தல் நடைபெறும் எனவும், ஆகஸ்ட் 19இல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி இருந்து வருகிறார். முழுநேர காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் கட்சியை வலுப்படுத்தவும் தேர்தல் நடைபெற உள்ளது.

ஆனால் தலைவரை தேர்ந்தெடுப்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. ராகுல் காந்தி தலைவர் பதவிக்கு போட்டியிட தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறார். மேலும் நேரு-காந்தி குடும்பத்தில் இருந்து யாரும் தலைவர் பதவிக்கு போட்டியிட வேண்டாம் எனவும் கூறி வருகிறார். அப்படி தலைவர் பதவிக்கான தேர்தலில் காந்தி குடும்பம் போட்டியிடவில்லை என்றால் 24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பம் அல்லாத ஒருவரை காங்கிரஸ் தலைமையில் பார்க்க முடியும்.

கட்சியிலிருந்து மூத்த தலைவர்கள் விலகுவது காங்கிரஸிற்கு மேலும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அண்மையில் குலாம் நபி ஆசாத் கட்சியிலிருந்து விலகினார். இவ்வாறு பரபரப்பான சூழலில் காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. அதோடு யார் அடுத்த தலைவர் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

கட்சியின் ஜனநாயக செயல்பாட்டை மீட்டெடுக்க தேர்தல் ஒரு வாய்ப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.

நேரு-காந்தி குடும்பத்தில் யாரும் போட்டியிடவில்லை என்றால், அசோக் கெலாட், மீரா குமார், மல்லிகார்ஜுன கார்கே, முகுல் வாஸ்னிக் பெயர்கள் முன்மொழியப்படும் என கூறப்படுகிறது. ஆனால் அவர்கள், ஆசாத் தனது ராஜினாமா கடிதத்தில் கூறியது போல், ராகுலின் முடிவுக்கு கட்டுப்பட்டவராக இருப்பார் என்று கூறப்படுகிறது.

காந்தி குடும்பம் அல்லாத தலைவர்களின் காலத்தில் கட்சி வரலாறு மிகவும் புகழ்பெற்றதாக இல்லை என்பதை சுட்டிக்காட்டுகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு கடந்த 75 ஆண்டுகளில், கட்சியில் 12 வெளி நபர்கள், நேரு-காந்தி குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தலைவர்களாக இருந்துள்ளனர். காந்தி குடும்பத்தை சேராத தலைவர்களில் காமராஜரை குறிப்பிட்டு கூறலாம்.

ஆனால் தற்போதைய காங்கிரஸை இந்திரா காந்தி அல்லது ராஜீவ் காந்தி காலக்கட்டத்துடன் ஒப்பிடுவது தவறானது. இந்திரா, ராஜீவ் காலத்தில் காங்கிரஸுக்கு என தனி வாக்குகள், கவர்ச்சியான வாக்குகள் இருந்தன. மாநிலங்களில் வலுவான தனி கட்சியாக இருந்தது. மக்களின் வாக்குகளை பெற முடிந்தது. தனித்து போட்டியிட்டால் வெற்றி பெற முடிந்தது. ஆனால் தற்போது காங்கிரஸில் இரண்டும் இல்லை.

1991 முதல் 1998 வரையிலான காலகட்டத்தில் நேரு குடும்பம் இல்லாத காங்கிரஸ் தலைமையை கட்சி பார்த்தது. பி வி நரசிம்ம ராவ் மற்றும் சீதாராம் கேஸ்ரி ஆகியோரின் காலகட்டங்களில் கட்சி மீண்டும் பிளவடைந்தது. ஆனால் அப்போதும் காங்கிரஸ் பிரதான கட்சியாகவே இருந்தது. திரிணாமுல் காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி, 2011ஆம் ஆண்டில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் என எந்த கட்சியாக இருந்தாலும், பிளவுபட்டவர்கள் எப்பொழுதும் ‘காங்கிரஸ்’ முத்திரையை ஏந்தியிருந்தனர். சோனியாவின் ஆரம்ப ஆண்டுகளில், ஷரத் பவார், தாரிக் அன்வர் மற்றும் பி எஸ் சங்மா ஆகியோருடன் கட்சி பிளவுபட்டு என்சிபியை உருவாக்கியது. ஆனால் விரைவில் நிலைமை சீரானது.

1998 முதல் கட்சி குடும்ப அக்கறையை பெற்றது. 2014க்குப் பிறகு காங்கிரஸ் பெயரில் பிளவு இல்லை.
மாறாக, தேர்தல் தோல்விகளுக்கு மத்தியில், பல தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறியுள்ளனர். தொடர்ச்சியான வெளியேற்றங்கள், தோல்விகள் ராகுலுக்கும் குடும்பத்தினருக்கும் கட்சியை சீரமைப்பதற்கு வாய்ப்பாக உள்ளது. கட்சியை செயல்பட வைத்தாக வேண்டும். கட்சியின் ஜனநாயக செயல்பாட்டை மீட்டெடுக்க தேர்தல் ஒரு வாய்ப்பாக இருக்கும். வரலாற்றில் இருந்து பல பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இதுவாகும்.


source https://tamil.indianexpress.com/india/will-the-gandhis-step-back-in-polls-for-party-president-an-opportunity-to-send-out-a-message-502191/